உச்ச நீதிமன்றமே சட்டம் இயற்றினால் நாடாளுமன்றம் எதற்காக இருக்கிறது அதை இழுத்து மூடுங்கள் என்று ஜார்க்கண்ட் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கடுமையாக உச்ச நீதிமன்றத்தை விமர்சித்துள்ளார். ஆளுநர்கள், குடியரசுத் தலைவர்கள் மசோதாக்களை நீண்டகாலம் கிடப்பில் போடக்கூடாது 3 மாதங்களுக்குள் அதற்கு தீர்வு காண வேண்டும் என்று காலக்கெடு விதித்தது. அது மட்டுமல்லாமல் சட்டப்பேரவை, நாடாளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை ஆகியவற்றுக்குரிய அதிகாரத்தை பிரித்து கூறியது. இந்த விவகாரம் பாஜக எம்.பிக்களுக்கு மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்த உச்ச நீதிமன்றத்தை கடுமையாக விமர்சித்து குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கடந்த சில நாட்களுக்கு முன் பேசியிருந்தார். உச்சநீதிமன்றம் அரசியலமைப்புச் சட்டம் 142 பிரிவு அதிகாரத்தை பயன்படுத்தி தீர்ப்பளிப்பதையும் தனகர் கடுமையாக விமர்சித்திருந்தார். குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதையும் படிங்க: அரசியலமைப்புச் சட்டம் 142 (Article 142) என்றால் என்ன? உச்ச நீதிமன்றத்தை ஜெகதீப் தனகர் ஏன் கேள்வி எழுப்பினார்?

இந்நிலையில் ஜார்க்கண்ட் பாஜகஎம்.பி. நிஷி காந்த் துபே எக்ஸ் தளத்தில் உச்ச நீதிமன்றத்தை விமர்சித்து பேசியுள்ளார். அவரின் கருத்தில் “ சட்டங்கள் உச்ச நீதிமன்றத்தால் இயற்றப்பட்டால், நாடாளுமன்றம் எதற்கு இழுத்து மூடிவிடலாமே. நாட்டில் தற்போது நடக்கும் சிவில் போர்களுக்கு காரணமே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கண்ணா” எனத் தெரிவித்திருந்தார்.
மேலும் உ.பியின் துணை முதல்வர் ஷர்மா பேசுகையில் “நாடாளுமன்றத்துக்கோ அல்லது குடியரசுத் தலைவருக்கோ யாரும் உத்தரவிட முடியாது” னத் தெரிவித்திருந்தார். வக்ஃபு சட்டத்திருத்தத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் சட்டத்தின் கீழ் புதிய உறுப்பினர்களை நியமிக்கத் தடைவிதித்தது, சட்டத்தை நடைமுறைப்படுத்தமாட்டோம் என மத்திய அரசும் உறுதியளித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பையடுத்து, பாஜக மூத்த தலைவர் நிஷிகாந்த் துபே இவ்வாறு காட்டமாக கருத்துத் தெரிவித்துள்ளார். பாஜக எம்.பி., துணை முதல்வர் பேசிய கருத்துக்கள் குறித்து பாஜக தலைமை அலுவலகம் கழுவும் மீனில் நழுவும் மீன்போல் ஒதுங்கியது.

பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “ பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே, தினேஷ் ஷர்மாவின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதித்துறை குறித்த கருத்துக்கும், பாஜகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அது அவர்களின் தனிப்பட்ட கருத்து, பாஜகவுக்கு அந்தக் கருத்துக்களில் உடன்பாடில்லை, அதை ஆதரிக்கவும் இல்லை. பாஜக இந்தக் கருத்துக்களை முற்றிலும் நிராகரிக்கிறது. கட்சியின் அனைத்து எம்.பி.க்கள் உறுப்பினர்கள் தலைவர்கள் யாரும் இதுபோன்ற கருத்துக்களை தெரிவிக்கக்கூடாது.

நீதித்துறையையும், நீதிபதிகளையும் எப்போதும் பாஜக மதிக்கிறது, அவர்களின் ஆலோசனைகளை ஏற்று செயல்படும். அனைத்து நீதிமன்றங்களையும் பாஜக மதிக்கிறது, நம்புகிறது. இதில் உச்ச நீதிமன்றம், நம்முடைய ஜனநாயகத்தில் பிரிக்க முடியாத அங்கம். அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதில் வலிமையான தூண்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ‘இந்தி இந்துக்களுக்கானது, உருது முஸ்லிம்களுக்கானது என்பது ஒற்றுமைக்கு கேடு’.. உச்சநீதிமன்றம் வேதனை..!