டாடா குழுமத் தலைவர் என்.சந்திரசேகரனுக்கு 'கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி பிரிட்டிஷ் எம்பயர்' என்ற நைட்ஹூட் விருதை வழங்கி கவுரவப்படுத்தி இருக்கிறது இங்கிலாந்து அரசு.இந்தியா- இங்கிலாந்து வணிக உறவுகளுக்காக அவர் செய்த சேவைகளுக்காக சந்திரசேகரன் இந்த இங்கிலாந்து அரசின் விருதை வென்றுள்ளார்.
இந்த விருதை வழங்கியதற்காக சந்திரசேகரன் மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு நன்றி தெரிவித்தார். "இந்த மதிப்புமிக்க அங்கீகாரத்தால் நான் மிகவும் தாழ்மையுடன் இருக்கிறேன். இதற்காக மன்னர் சார்லஸுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" என்று அவர் கூறினார்.
"ஜாகுவார் லேண்ட் ரோவர், டெட்லி போன்ற எங்கள் தயாரிப்புகளின் பிரிட்டிஷ் பிராண்டுகளைப் பற்றி நாங்கள் நம்பமுடியாத அளவிற்கு பெருமைப்படுகிறோம். நாங்கள் இங்கிலாந்தில் 70,000 க்கும் மேற்பட்டவர்களைப் பணியமர்த்திய்யுள்ளோம். தொழில்நுட்பம், நுகர்வோர், விருந்தோம்பல், எஃகு, ரசாயனங்கள் மற்றும் வாகனத் துறைகளில் இங்கிலாந்துடன் வலுவான முக்கிய உறவுக்காக டாடா குழுமம் தொடர்ந்து பாடுபடும்'' என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: தனியார் பள்ளியின் பித்தலாட்டம் ... கேள்விக்குறியான 19 மாணவர்களின் எதிர்காலம் ...!

பாரதி எண்டர்பிரைசஸின் சுனில் பாரதி மிட்டலுக்கும் இதே பிரிவில் நைட்ஹூட் விருது வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து இறையாண்மையால் வழங்கப்படும் மிக உயர்ந்த சிவில் விருதுகளில் ஒன்று நைட்ஹூட்.வெளிநாட்டினர் இதை கௌரவ விருதாகப் பெறுகிறார்கள்.
2024 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் விருதுகளை பெற்ற மற்ற வெளிநாட்டினரில் முன்னாள் கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலைவர் எரிக் ஷ்மிட், ரே, டாக்மர் டால்பி குடும்ப நிறுவனத்தின் இணை நிறுவனர் டாக்மர் டால்பி, ஹார்வர்ட் பல்கலைக்கழக பொருளாதார பேராசிரியர் ஜேசன் ஃபர்மன், இந்திய முன்னாள் படைவீரர் சங்கத்தின் நிறுவனரும், உறுப்பினருமான ராஜிந்தர் தாட் ஆகியோர் பெற்றனர்.
டாடா குழுமத் தலைவர் என்.சந்திரா என்று பிரபலமாக அறியப்பட்டவர். சைரஸ் மிஸ்திரி பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து 2017-ல் டாடா சன்ஸ் நிறுவனத்தின் உயர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். அவர் அக்டோபர் 2016-ல் டாடா சன்ஸ் வாரியத்தில் சேர்ந்தார்.

டாடா குழுமத்தின் தலைமையில் முதல் பார்சி அல்லாதவரும் என்.சந்திரசேகரன் மட்டுமே.டாடா சன்ஸ் தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, அவர் டிசிஎஸ் நிறுவனத்தில் 30 ஆண்டுகள் பணியாற்றினார். அதில் அவர் 2009-17 வரை தலைமை நிர்வாக அதிகாரியாக பதவியை அலங்கரித்தார்.2023 ஆம் ஆண்டில், சந்திரசேகரனுக்கு பிரான்சின் மிக உயர்ந்த குடிமகன் விருதான ‘செவாலியர் டி லா லெஜியன் டி'ஹானர்’ (நைட் ஆஃப் தி லெஜியன் ஆஃப் ஹானர்) விருது வழங்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டில் அவருக்கு இந்திய அரசின் மிக முக்கியமான பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.

நடராசன் சந்திரசேகரன், தமிழ்நாட்டில், நாமக்கல் மாவட்டதிற்குட்பட்ட மோகனூரில் பிறந்தவர். கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் இளங்கலைப் பட்டத்தை பெற்றார். திருச்சி மண்டல பொறியியல் கல்லூரியில் கணினிப் பிரிவில் முதுகலையில் பட்டம் பெற்று டிசிஎஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். டாடா சன்ஸ் தலைவராக பொறுப்பேற்று சாதனைகள் படைத்து தமிழகத்திற்கும் பெருமை சேர்த்து வருகிறார்.
இதையும் படிங்க: மோடியின் அமெரிக்கப் பயணத்தால் மணிப்பூர் முதல்வர் ராஜினாமா..? அமித் ஷாவின் அகில உலக அரசியல் கணக்கு..!