சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், பத்மாவதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சார்லஸ் (60). இவர், திருமுல்லைவாயல், சுதர்சன் நகரில் 14 ஆண்டுகளாக ஆலியா கெமிக்கல்ஸ் என்ற பெயரில் தின்னர் ஏற்றுமதி செய்யும் குடோன் நடத்தி வருகிறார். இங்கிருந்து, அம்பத்தூர் தொழிற்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெயின்ட் கம்பெனிகளுக்கு தின்னர் சப்ளை செய்து வருகின்றனர். இது வாடகை கட்டிடம் ஆகும். இதில், கணக்காளர், லோடு மேன் மற்றும் டிரைவர் ஆகிய 3 பேர் பணிபுரிந்து வருகின்றனர். நிறுவனத்தின் உரிமையாளர் தொழில்ரீதியாக பெங்களூரு சென்றுள்ளார்.
இந்நிலையில், குடோனில் சரக்கு வாகனத்தில் லோடு ஏற்றும்போது, திடீரென தின்னர் கசிந்து, உஷ்ணத்தால் தீப்பிடிக்க ஆரம்பித்தது. ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். சிறிது நேரத்தில் தீ மளமளவென குடோன் முழுவதும் பரவியது. அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக குடோனை விட்டு வெளியேறினர். இந்த குடோனின் பின்புறம் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. கணக்காளர் தணிகாச்சலம் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கும், அருகில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்தார். அதன்பேரில், பள்ளி நிர்வாகத்தினர் மாணவர்களை உடனடியாக வெளியேற்றினர். உணவு இடைவேளை என்பதால் மாணவர்கள் தாங்கள் கொண்டு வந்த உணவை அங்கேயே வைத்துவிட்டு அலறியடித்து வெளியேறினர். இதனால் பள்ளியில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதற்கிடையே நிறுவனத்தில் இருந்த 60 கெமிக்கல் பேரல்கள் எரிந்து வானுயர கரும் புகை வெளியேறியது. இதனால் ஆவடி சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக சென்னை புறநகர் மாவட்ட அலுவலர் தென்னரசு, உதவி மாவட்ட அலுவலர் பொன்மாரியப்பன், திருநாவுக்கரசு ஆகியோர் தலைமையில் அம்பத்தூர், பூந்தமல்லி, ெஜஜெ நகர், வில்லிவாக்கம், மதுரவாயல் மற்றும் ஒன்றிய அரசு நிறுவனத்தின் தீயணைப்பு வாகனம் உள்பட 8 தீயணைப்பு வாகனங்களில் 50 தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு வந்து சுமார் மூன்று மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதையும் படிங்க: தீரன் படத்தை மிஞ்சும் கொள்ளை சம்பவம்..! சென்னையில் கைவரிசை காட்டிய மகாராஷ்டிரா கொள்ளையர்கள்..!
பள்ளி நிர்வாகம் உடனடியாக பள்ளி வளாகத்தில் இருந்து மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஆவடி மாநகராட்சி சார்பில் நான்கு 108 ஆம்புலன்ஸ் மற்றும் 12 பேர் கொண்ட இரண்டு மருத்துவகுழு சம்பவ இடத்திற்கு வந்து முகாமிட்டிருந்தனர். அதிர்ஷ்டவசமாக தீ விபத்தில் யாருக்கும் உயிர்ச் சேதமோ, பாதிப்போ இல்லை. தீ விபத்தில், குடோனில் இருந்த சரக்கு வாகனம், ஒரு இருசக்கர வாகனம், தனியார் பள்ளியில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் இருந்த இரண்டு பைக்குகள் மற்றும் 5 சைக்கிள்கள் தீயில் கருகி நாசமாகின.

மேலும், தீ பிளம்பால் பள்ளி கட்டிடத்தின் சுவர்கள் சேதமடைந்து ஜன்னல் கண்ணாடிகள் சுக்கு நூறாக உடைந்து நொறுங்கியது. மேலும் பள்ளியில் இருந்த மேசை, நாற்காலிகளும் தீயில் கருகின. தகவலறிந்து அமைச்சர் சா.மு.நாசர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டார். அப்போது ஆவடி மேயர் ஜி.உதயகுமார், ஆவடி மாநகராட்சி ஆணையர் கந்தசாமி, ஆவடி வட்டாட்சியர் உதயம், ஆவடி சுகாதார அலுவலர் ராஜேந்திரன், காவல் உதவி ஆணையர் கிரி, கனகராஜ் மற்றும் காவலர்கள், அரசு ஊழியர்கள் உடனிருந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: தேவநாதன் யாதவ் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதா? இல்லையா? காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி..!