2026 சட்டமன்றத் தேர்தலில் தவெகவுக்கும் திமுகவுக்கும்தான் நேரடி போட்டி என விஜய் பேசியது அதிமுகவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற தவெக முதல் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய விஜய், ''மன்னராட்சி முதல்வர் அவர்களே, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே, பெயரை மட்டும் வீராப்பாக சொன்னால் பத்தாது. செயலிலும், ஆட்சியிலும் காட்ட வேண்டும். ஒன்றியத்தில் பா.ஜ.க ஆட்சியை பாசிச ஆட்சி என்று சொல்லும் நீங்கள் மட்டும் என்ன செய்றீங்க? அதுக்கு கொஞ்சமும் குறைவில்லாத ஆட்சி தானே நடத்துகிறீர்கள்?

இதுவரை தமிழகம் காணாத ஒரு தேர்தலை அடுத்தாண்டில் தமிழகம் காணப் போகிறது. இரண்டே இரண்டு பேருக்கு இடையில் தான் போட்டி. த.வெ.க.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் தான் தேர்தலில் போட்டி நிலவும். தமிழகத்தில் உண்மையான மக்களாட்சி மலர தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும்.இதுவரைக்கும் சந்திக்காத வித்தியாசமான தேர்தலை அடுத்த வருடம் தமிழ்நாடு சந்திக்கும்'' என அவர் தெரிவித்து இருந்தார்.
இதையும் படிங்க: மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே… மு.க.ஸ்டாலினை நேரடியாக அட்டாக் செய்த விஜய்..!

திமுகவுக்கும், தவெகவுக்கும்தான் நேரடி போட்டி என்று விஜய் பேசியதால் தற்போது எதிர்கட்சியாகவும், திமுகவை போல பலமாகவும் இருக்கும் அதிமுக ஆத்திரம் அடைந்துள்ளது. இதுகுறித்து அதிமுக மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செம்மலை, ''திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையே போட்டி என்பது விஜயின் பேராசை'' எனத் தெரிவித்துள்ளார்.

விஜயின் பேச்சு குறித்து அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயகுமார், ''தவெக தொண்டர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் அப்படி பேசியுள்ளார். ஆனால், 2026ல் உண்மையான தேர்தல் களம், நேரடிப்போட்டி அதிமுகவுக்கும், திமுகவுக்கும்தான்'' எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அதிமுக-பாஜக கூட்டணி அமைப்பதாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றபோது, முன்னாள் அமைச்சர்கள், சேலம் செம்மலையும், ராமநாதபுரம் அன்வர் ராஜாவும் அதிமுகவின், பாஜக ஆதரவு நிலையை ரசிக்கவில்லை. ஆகையால் அவர்கள் அதிமுகவை விட்டு விலகிச் செல்வார்கள்.

அப்படி வெளியேறினால் திமுகவுக்கு நிச்சயம் செல்ல மாட்டார்கள். தவெக அவர்களை அரவணைக்க முயற்சிக்கிறது. இருவரின் அனுபவம் தவெகவுக்கு உதவும்'' என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இந்நிலையில், விஜய் பேச்சை செம்மலை விமர்சித்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
இதையும் படிங்க: கனிமொழி அக்கா..! உங்க அண்ணா கிட்ட சொல்லுங்க.. இல்ல என் அண்ணன் கிட்ட விடுங்க - தவெக நிர்வாகி மாஸ் ஸ்பீச்..!