திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாகவும், பேருந்துகளிலும், சொந்த வாகனங்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். கடந்த காலங்களில் திருமலையில் பக்தர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தது. அதனால் கடந்த 1985 ஆம் ஆண்டு அப்போதைய ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவ் ஏழுமலையான் கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் பசியோடு இருக்ககூடாது என தினந்தோறும் 2,000 பக்தர்களுக்கு இலவசமாக அன்னதானம் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். மேலும் இந்த திட்டம் எந்தவிதத்திலும், எப்போதும், நிதி சுமை காரணமாக நிறுத்தும் நிலைக்கு செல்லக்கூடாது என்றும் முடிவு செய்தார்.

இதற்காக அப்போதே ஸ்ரீ வெங்கடேஸ்வரா நித்திய அன்னப்பிரசாத அறக்கட்டளையும் துவங்கப்பட்டது. தற்போது இந்த அறக்கட்டளைக்கு பக்தர்கள் தொடர்ந்து நன்கொடையாக பல கோடி ரூபாய் வழங்கி வருகின்றனர். அவ்வாறு ₹2000 கோடிக்கு மேல் பக்தர்கள் அன்னப்பிரசாத அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். அதன் மூலம் ஆண்டுக்கு ₹150 கோடிக்கு மேல் தேவஸ்தானத்திற்கு வருவாய் கிடைக்கிறது. இந்த வருவாயின் மூலம் பக்தர்களுக்கு சுவையான மற்றும் தரமான அன்னபிரசாதங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மட்டுமல்லாமல் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலிலும் தேவஸ்தானத்தின் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளிலும் அன்னபிரசாதம் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க: திருப்பதியில் குழந்தையை கடத்திய பெண்..! ஒரே மணி நேரத்தில் சிசிடிவியை வைத்து அல்லேக்காக மடக்கிய போலீஸ்..!

அவ்வாறு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த அன்னப்பிரசாதத்தை சாப்பிட்டு வருகின்றனர். திருமலையில் உள்ள தரிகொண்ட வெங்கமாம்பா நித்ய பிரசாத அறக்கட்டளையின் அன்னப்பிரசாதம் மையத்தில் காலை 8.30 மணிக்கு தொடங்கக்கூடிய உணவு விநியோகம் இரவு 11 மணிவரை இரண்டு முறை இடைவேளைக்கு மத்தியில் தொடர்ந்து வழங்கப்படுகிறது. இந்த அன்னப்பிரசாதம் மையத்தில் சாதம், சாம்பார், ரசம் ,மோர், சக்கரை பொங்கல், காய்கறி பொரியல், சட்னி உள்ளிட்ட ஏழு வகையான பிரசாதங்கள் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட அறங்காவலர் குழு முடிவின்படி கூடுதலாக மசால்வடை வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக சோதனை அடிப்படையில் கடந்த மாதம் ஒரு நாளைக்கு 5,000 வடைகள் என சில நாட்கள் வழங்கப்பட்டது. அது பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இன்று முதல் தொடர்ந்து பக்தர்களுக்கு மசாலா வடை வழங்கும் திட்டத்தை அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர் நாயுடு, செயல் அதிகாரி ஷியாமலா ராவ், கூடுதல் செயல் அதிகாரி வெங்கைய்யா சௌத்ரி ஆகியோர் இணைந்து பக்தர்களுக்கு மசால் வடை பரிமாறி துவங்கி வைத்தனர். இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய செயல் அதிகாரி ஷியாமளா ராவ், தற்பொழுது ஏழு விதமான அனப்பிரசாதங்கள் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது அத்துடன் மசாலாவடை வழங்க அறங்காவலர் குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒரு நாளைக்கு மதிய உணவில் 35 ஆயிரம் வடைகள் பக்தர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது படிப்படியாக வருங்காலத்தில் மேலும் அதிகரிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருப்பதியில் மூச்சு திணறி மயங்கிய சிறுவன்.. 3 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு உயிரிழந்ததாக அறிவிப்பு.. ..