சுங்க கட்டணம் என்பது, பொருட்களை கொண்டு செல்லும்போது, அந்த எல்லைகளைக் கடந்து செல்லும் சரக்குகள் மீது விதிக்கப்படும் வரி. சாலை பராமரிப்பு மற்றும் மேம்பாடு,பயணிகள் மற்றும் வாகனங்களின் பாதுகாப்பு, பொதுமக்கள் மற்றும் வணிக செயல்பாடுகளில் பயன்பாடு ஆகியவற்றுக்காக சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கட்டங்களாக, சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில், வானகரம், சூரப்பட்டு, பட்டறைப்பெரும்புதூர் உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் உயர உள்ளது.
இதையும் படிங்க: அவுரங்கசீப் கல்லறை விவகாரம்! பதற்றத்தை தணிக்க சம்பாஜி நகரில் 144 தடை உத்தரவு

தமிழகத்தில் மொத்தம் 78 சுங்கச்சாவடிகள் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 12 சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றுள் 40 சுங்கச் சாவடிகளில் ஏப்ரல் 1ஆம் தேதியும், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 ஆம் தேதியும் கட்டணம் மாற்றி அமைக்கப்பட உள்ளது.

சென்னையில் உள்ள சுங்கச்சாவடிகள் உள்பட தமிழகம் முழுவதும் 40 சுங்கச்சாவடிகளில் வருகிற 1 ஆம் தேதி கட்டணம் உயர்த்தப்படுகிறது. வாகனங்களின் வகைகளை பொருத்து சுங்கச் சாவடி கட்டணம் 5 ரூபாய் முதல் 75 ரூபாய் வரை உயர்த்தப்பட உள்ளது. வானகரம், சூரப்பட்டு, தாம்பரம்-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நல்லூர் சுங்கச்சாவடி, ஆத்தூர் சுங்கச்சாவடி, பரனூர் சுங்கச்சாவடி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ஆம் தேதி கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளது.

சுங்கச்சாவடி கட்டண உயர்வு காரணமாக விலைவாசி அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவிக்கும் நிலையில் வாகன ஓட்டிகள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். கட்டண உயர்வு, போக்குவரத்து செலவுகளை அதிகரிக்கக்கூடும் என்பதால் மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தலாம்., குறிப்பாக, குறைந்த வருமானம் கொண்ட பயணிகள், சிறிய வாகன உரிமையாளர்கள் அதிக செலவு எதிர்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கேந்திரிய பள்ளிகளில் தமிழாசிரியர்கள் எண்ணிக்கை 0.. சமஸ்கிருத ஆசிரியர்கள் 65.. மத்திய அரசுக்கு கனிமொழி கிடுக்கிப்பிடி!!