தமிழக அரசியல் களத்தில் புதிதாக இணைந்துள்ள நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் தொடங்கி உள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் கூட்டணிகளை இறுதி செய்வதிலும், வியூகங்களை வகுப்பதிலும் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் தவெக-வும் உறுப்பினர் சேர்க்கையை அதிகரிப்பது, மாவட்டந்தோறும் நிர்வாகிகளை நியமிப்பது என்று அதிரடி காட்டுகிறது. அந்த வகையில் தவெகவின் முதலாவது செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: விஜய்க்கு துணை முதல்வர் பதவியா? - செல்லூர் ராஜூ ஓபன் டாக்...!
பொதுக்குழு நடைபெறும் திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டருக்கு காலை 7 மணிக்கே நடிகரும், கட்சியின் தலைவருமான விஜய் வருகை தந்துவிட்டார். முக்கிய நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். காலை உணவுக்குப் பின்னர் 10 மணியளவில் பொதுக்குழு நடைபெறும் மேடைக்கு அவர் வருகை தந்தார். அப்போது கூடியிருந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் ஆரவாரம் செய்தனர்.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் 137 செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டவாரியாக ஒரு செயலாளர், பொருளாளர், இணைச்செயலாளர், 2 துணைச்செயலாளர் என மொத்தம் ஒரு மாவட்டத்திற்கு 5 பேர் வீதம் 120 மாவட்டத்திற்கு 1,800 பேர் அனுமதிக்கப்பட்டனர்.
கட்சியின் கொடியை பின்னணியாகக் கொண்ட மேடையில் மொத்தம் 8 இருக்கைகள் போடப்பட்டிருந்தன. இதில் கட்சியின் தலைவர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன், பொருளாளர் வெங்கட்ராமன், துணைச்செயலாளர் நிர்மல்குமார், இணைச்செயலாளர் ஷாகிரா, உறுப்பினர் சேர்க்கை அணி மாநில செயலாளர் விஜயலட்சுமி, தலைமை நிலையச் செயலாளர் ராஜசேகர் உள்ளிட்டோர் அமர வைக்கப்பட்டனர்.

இந்த பொதுக்குழுவில் பங்கேற்க வந்த உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே அடையாள அட்டை அனுப்பப்பட்டிருந்தது. அதனை காண்பித்த பிறகே அவர்கள் அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர். பதிவேட்டிலும் அவர்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. செல்போனுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. 2000-த்திற்கு மேற்பட்டோர் மண்டலவாரியாக பிரித்து பிரித்து அமர வைக்கப்பட்டனர். வடமண்டலம், தென்மண்டலம், கொங்குமண்டலம், மத்திய மண்டலம் என அவர்கள் பிரித்து உட்கார வைக்கப்பட்டனர்.

இந்த கூட்டத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணிப் பற்றி பேச்சுவார்த்தை நடத்த தலைவர் விஜய்க்கு அதிகாரம் அளித்து முடிவு எடுக்கப்பட உள்ளது. மேலும் தமிழ்நாட்டின் தற்போதைய முக்கிய பிரச்னைகள் தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. உட்கட்சி விவகாரங்கள் பேசி முடிந்தபிறகு மேடையில் அமர்ந்துள்ள அனைத்து நிர்வாகிகளும் பேச உள்ளனர். இறுதியாக கட்சியின் தலைவர் விஜய் பேசுவதோடு கூட்டம் நிறைவுபெறும். பொதுக்குழுவில் பங்கேற்க வந்தவர்களுக்கு காலை உணவும், மதிய உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுக்குழுவையொட்டி சென்னை கிழக்குக் கடற்கரை சாலை, திருவான்மியூர் ஆகிய பகுதிகள் தவெக கொடிகளால் நிறைந்து வழிகிறது.
இதையும் படிங்க: 2026-ல் திமுக அரசை மாற்றுவோம்.. மகளிர் தினத்தில் வீடியோவில் தோன்றி விஜய் பேச்சு..!