தமிழகம் முழுவதும் பெண்கள், இளம் சிறுமிகள் மீதான பாலியல் தொல்லைகள் குறித்த புகார்கள் அதிகரித்து வருகிறது. மறுபுறம் வயதானவர்களை குறிவைத்து நடக்கும் சைபர் குற்றங்களும், ஆன்லைன் அரஸ்ட் போன்ற மோசடி குற்றங்களும் பெருகி வருகின்றன.
இதனிடையே சில இளைஞர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு செயின் பறிப்பு உள்ளிட்ட திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதும், பின்னர் போலீசில் சிக்கி கம்பி எண்ணுவதும் தொடர்கதையாகி தொடர்கிறது. அவர்களுடன் சேர்ந்து இளம் பெண்கள் சிலரும் வழிப்பறியில் ஈடுபடுவதையும் பார்க்க முடிகிறது. அதன் ஒருபகுதியாக கோவையில் பெண்கள் இருவர் பைக்கில் சென்று செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை பீளமேடு பகுதிக்குட்பட்ட எல்லை தோட்டத்தைச் சேர்ந்தவர் கீதாரமணி, வயது 56. சில நாட்களுக்கு முன் வீட்டின் அருகே வளர்ப்பு நாயுடன் வாக்கிங் சென்றார். அப்போது அந்த வழியாக டூவீலரில் வந்த இரண்டு பெண்கள், கீதாரமணியை நெங்கியபடி வந்து வண்டியை நிறுத்தி உள்ளனர். கீதாமணியிடம் அட்ரஸ் கேட்பது போல நடித்துள்ளனர்.
அப்போது உங்கள் கழுத்தில் எறும்பு இருக்கு என தட்டிவிடுவது போல கீதாரமணி அருகில் வந்த பெண் அவரது கழுத்தில் இருந்த நாலரை பவுன் தங்க செயினை பறித்தார். கீதாரமணி சுதாகரிப்பதற்குள் இருவரும் வண்டியை ஸ்டார்ட் செய்து தப்ப முயன்றுள்ளனர். அதற்குள் கீதாரமணி கத்தி கூச்சலிட்டுள்ளார். கீதா ரமணியின் அலறல் சத்தம் கேட்டு, கணவர், மகன் ஓடிவந்து, தப்ப முயன்ற இரு பெண்களையும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: அமித் ஷா போட்ட பதிவுல இதை கவனிச்சீங்களா?.... துள்ளாட்டம் போடும் அண்ணாமலை ஆதரவாளர்கள்...!
செயின் பறிப்பில் ஈடுபட்டது திருப்பூரை சேர்ந்த கிருஷ்ணவேணி, அபிராமி என போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இருவரும் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலமாக லட்சக்கணக்கில் கடன் வாங்கியுள்ளனர். கடன்களுக்கான தொகையை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளனர். கடன் தொகையை திருப்பிச் செலுத்த திட்டமிட்டு செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு துடியலூர் அருகே ஒரு பெண்ணிடம் இந்த கும்பல் 5 சவரன் நகையை பறித்துள்ளது. காந்தி மாநகர் பகுதியில் மற்றொரு பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி தூவிவிட்டு செயின் பறிக்க முயற்சி செய்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடனை கட்ட பெண்களே செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை உண்டாக்கியது.
இதையும் படிங்க: மின் இணைப்பு கொடுக்க லஞ்சம்.. ரூ.18,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர்கள் இரண்டு பேர் கைது.. கையும் களவுமாக பிடித்த போலீசார்..