திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த ஈச்சங்கால் கிராமத்தை சேர்ந்தவர் சபரி. (வயது 24). இவரது வீட்டில் அனுமதியின்றி நாட்டு வெடிகள் மற்றும் பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு சபரி வீட்டில் இருந்த பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறியதில், சபரியின் கை விரல்கள் துண்டாகின. அவரது கண்களிலும் காயங்கள் ஏற்பட்டது. நாட்டு வெடி வெடித்த பயங்கர சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக விரைந்து சென்று பார்த்துள்ளனர்.
அப்போது ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சபரியை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அதன் பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த அம்பலூர் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு விசாரணை மேற்கொண்டுனர். மேலும் சம்பவம் குறித்து வேலூர் தடயவியல் மற்றும் வெடி பொருள் நிபுணர்களுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த சபரியின் உறவினர் ஐயப்பன் என்பவர் வாணியம்பாடி சுற்று வட்டார பகுதிகளில் பட்டாசு கடை வைத்து விற்பனை செய்து வருவது தெரிந்தது.
இந்த நிலையில் அவரது உறவினரான சபரி தனது வீட்டில், நாட்டு வெடிகுண்டு மற்றும், பட்டாசுகளை தயாரித்து, அதனை ஐயப்பனிடம் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு சபரி தனது வீட்டில் சட்டவிரோதமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்து வந்தபோது திடீரென நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டது. இதில் சபரியின் விரல்கள் துண்டானது தெரியவந்தது.
இதையும் படிங்க: கள்ளக்காதலுக்கு இடையூறாக கணவன்.. துபாயில் இருந்தபடியே தீர்த்துக்கட்டிய மனைவி.. கம்பி எண்ணும் கள்ளக்காதலன்..!

இந்த நிலையில் இன்று வேலூர் தடயவியல் மற்றும் வெடி பொருள் நிபுணர்கள் மற்றும் அம்பலூர் போலீசார் ஐயப்பன் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது சட்டவிரோதமாக அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடி மற்றும் பட்டாசுகளை தயார் செய்ய வைத்திருந்த 50 கிலோ வெடி மருந்துகளை பறிமுதல் செய்தனர். மேலும் பட்டாசு கடை உரிமையாளர் ஐயப்பன் மீது வழக்குப் பதிவு செய்த அம்பலூர் போலிசார் அவரை கைது செய்தனர்.

மேலும் ஈச்சங்கால் பகுதியில் ஏற்கனவே கடந்த ஆண்டி நவம்பர் மாதம் 29 ஆம் தேதி ஐயப்பன் என்பவர் வீட்டின் அருகிலேயே அரசு அனுமதியின்றி நடத்தி வந்த பட்டாசுகடையில் ஏற்பட்ட வெடி விபத்தில், 5 வீடுகள் சேதமடைந்தது விசாரணையில் தெரிந்தது.
அப்போது ஐயப்பன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், தற்போது மீண்டும் அதே பகுதியில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட நாட்டு வெடிகள், வெடித்து சிதறிய வழக்கில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க: பள்ளி காவலாளி குத்திக்கொலை.. பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு.. வாணியம்பாடியில் பயங்கரம்..!