தமிழ்நாட்டில் அடுத்த 10 நாட்களுக்கு வெயில் வாட்டி வதைக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது எக்ஸ் தள பதிவில், இனி வரும் நாட்களில் ஈரோடு, சேலம், நாமக்கல் பகுதியில் வெப்பநிலை 39°C இருக்கலாம். குறிப்பாக கரூரில் 40°C வரை வெப்பநிலை உயரும். மதுரையில் 39°C, திருச்சியில் 38°C முதல் 39°C வரை வெயில் இருக்கும். அரியலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இனி வெயில் வாட்டி எடுக்கும்.

உள்மாவட்டங்களில் சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. தற்போது மழை மேகங்கள் நாமக்கல் மாவட்டத்தை நோக்கி நகர்ந்து வருகின்றன. சென்னையை பொறுத்தவரை, அம்பத்தூர், ஆவடி என உள்பகுதியில் வெயில் 39 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். மயிலாப்பூர், சைதாப்பேட்டை பகுதிகளில் 37 முதல் 38 டிகிரி வரை வெயில் பதிவாகும். குறிப்பாக நாளையும் நாளை மறுநாளும் வெயில் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அடுத்த ஒரு மணி நேரத்தில் கொட்டப்போகும் மழை; மஞ்சள் அலர்ட்... கொளுத்தும் வெயிலில் கூல் அப்டேட்!!

முன்னதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. எனவே இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

21-04-2025 முதல் 25-04-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்த அளவில், இன்று முதல் 21-04-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3° செல்சியஸ் வரை உயரக்கூடும். 20-04-2025 முதல் 23-04-2025 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: மக்களே உஷார்... அடுத்த 3 மணி நேரத்தில் வெளுத்து வாங்க போகும் மழை; எந்த மாவட்டங்களில் தெரியுமா?