தூத்துக்குடி என்றதும் என்னவெல்லாம் நினைவுக்கு வரும் முத்துக்குளிக்கும் தொழில், முட்டையில் செய்யப்படும் மக்ரூன் இனிப்பு... ஆனால் இப்போது எது தெரியுமா எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருகிறது. கல்குவாரியும், அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளும் தான்..

ஆம், தூத்துக்குடியில் திரும்பிய திசையெல்லாம் இப்போது வகைதொகை தெரியாமல், வரம்புக்கு கட்டுப்படாமல் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வெட்டப்படும் பாறைகள், கருங்கற்கள் அண்டை மாநிலமான கேரளாவுக்கும், மாலத்தீவு நாட்டிற்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. முறையான அனுமதி இன்றி செயல்படும் கல்குவாரிகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை புகார் கொடுத்தும் உரிய தீர்வு எட்டப்படாமல் தூத்துக்குடி மக்கள் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளனர்.
இதையும் படிங்க: பேச மறுத்த காதலிக்கு தீ.. 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. இருவரை கைது செய்து விசாரணை..!

குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியம் ஆலந்தா, உழக்குடி, காசிலிங்காபுரம், வல்லநாடு, சவாலாப்பேரி, காரசேரி உள்ளிட்ட பகுதிகளில் தான் அதிகஅளவு சட்டத்திற்கு புறம்பான கல்குவாரிகள் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.
கல்குவாரிகளால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவது, பாறைகளை தகர்க்க பயன்படுத்தப்படும் வெடிபொருட்களால் காற்று மாசு ஏற்படுவது, வெடிபொருட்களின் சத்தத்தால் கால்நடைகள் பாதிக்கப்படுவது சமயங்களில் உயிரிழப்பை சந்திப்பது, கற்களை வெட்டி எடுத்துச் செல்லும் லாரி போன்ற கனரக வாகனங்களால் சாலைகள் பாதிக்கப்படுவது, விபத்துகள் ஏற்படுவது என்று தாங்கள் சந்திக்கும் இன்னல்களை வரிசைகட்டி கூறுகின்றனர் அந்த பகுதி மக்கள்.

இதுமட்டுமல்லாது ஏக்கர் கணக்கில் இரவுபகல் பாராமல் வெட்டி எடுக்கப்படும் கனிம வளங்கள் அரசிடம் உரிய கணக்கு காட்டப்படுகிறதா என்ற கேள்வியையும் கிராமவாசிகள் கேட்கின்றனர். உரிய ஆவணங்கள் இன்றி அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதாகவும் இதனால் கோடிக்கணக்கிலான ரூபாய் கொள்ளையடிக்கப்படுவதாகவும் அவர்கள் பகீர் குற்றச்சாட்டுக்களை அடுக்குகின்றனர்.

இதனிடையே ஆலந்தா கிராமமானது கிணற்றுப்பாசனத்தை நம்பியே விவசாயம் செய்யப்படுகிறது. சில மாதங்களாக கிணற்றில் நீர் அதலபாதாளத்திற்கு சென்றுள்ளதாகவும் இதனால் வேளாண்மைக்கு உரிய நீரின்றி சிரமப்படுவதாகவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதுபற்றி மாவட்ட கனிமவளத்துறை அதிகாரியிடம் முறையிட்டால் அவர் கல்குவாரிகளால் என்ன பிரச்னை என்று விவசாயிகளையே திருப்பிக் கேட்பதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத்தை சந்தித்து விவசாயிகள், கனிமவளத்துறை உதவி அதிகாரி குறித்து புகார் அளிக்க உள்ளனராம். ஒருவேளை அங்கும் தீர்வு கிடைக்காவிட்டால் மாவட்ட அளவில் போராட்டத்தை முன்னெடுக்க ஆலந்தா கிராமவாசிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மாணவர்களை ஏமாற்றிய FIITJEE மீது வழக்குப்பதிவு.. டெல்லி போலீஸ் அதிரடி..!