2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை 9.30 மணிக்கு சட்டமன்றத்தில் தொடங்கியது. இதில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது கடந்த ஆண்டு தமிழக அரசின் வருவாய், வரவு செலவு கணக்குகள், பெற்ற கடன்கள், கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறித்த தகவல்களை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
பட்ஜெட் தொடங்கியதும் துறைவாரியான அறிவிப்புகளை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். தமிழ் வளர்ச்சி தொடர்பான அறிவிப்புகளும், கல்வித்துறை வளர்ச்சி, தொழில் மேம்பாடு, பெண்களின் முன்னேற்றம் தொடர்பான அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன.

பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியதும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார். அப்போது எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தலைமையிலான அதிமுகவினர் எழுந்து நின்று ரூ.1000 கோடி மதுபான ஊழல் குறித்து குரலெழுப்பினர்.
இதையும் படிங்க: புதிய விமான நிலையம்... எதிர்பார்க்காத அறிவிப்பு தந்த பட்ஜெட்!!
மதுபானத்துறை தொடர்பான அமலாக்கத்துறை ரெய்டு குறித்தும் பேச முயன்றனர். அவர்களின் இந்த நடவடிக்கைக்கு சபாநாயகர் அப்பாவு அனுமதி அளிக்கவில்லை. இந்த அமளிகளுக்கு இடையே தங்கம் தென்னரசு தனது உரையை தொடங்கினார். எனினும் அமைச்சரை பேச விடாமல் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டதுடன் அவையில் இருந்து வெளியேறி வெளிநடப்பு செய்தனர்.

இவர்களை தொடர்ந்து பாஜக உறுப்பினர்களும் அவையில் இருந்து வெளியேறி வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, கடந்த ஒருவாரமாக டாஸ்மாக் தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. அதனடிப்படையில், நேற்று அமலாக்கத்துறை செய்தி வெளியிட்டது. அதில் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக கூறியுள்ளது. இதனால் டாஸ்மாக் தொடர்பாக 40,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது.
இது குறித்து அரசு இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை. முறைகேடு நடந்துள்ளதாக அறிவித்த பிறகும், இந்த அரசு மௌனமாக இருப்பதால் இதற்கு தார்மீக பொறுப்பேற்று திமுக அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினோம். எங்கள் கோரிக்கையை ஏற்காததால் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாணவர்களுக்காக தான் பட்ஜெட்... கல்விக்காக ரூ.46,767 கோடி ஒதுக்கீடு!!