சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் பாஜக மாநிலத் தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன், திமுக கூட்டணியில் விழுந்துள்ள விரிசலை சரி செய்யவே திமுக அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருப்பதாக கடுமையாக விமர்சித்தார்.
இன்றைய சூழ்நிலையில் தமிழகத்தில் மிக மோசமான ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டம் ஒழுங்கு சரியில்லை, பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. போக்சோ வழக்குகள் அதிகமாக பதிவாகி வருகிறது. வேங்கை வயலுக்கு இன்னும் தீர்ப்பு கிடைக்கவில்லை. சொந்தக் கூட்டணி கட்சியின் மாவட்டத் தலைவர் நெல்லை மாவட்டத்தில் கொலையுண்டார். இன்று வரை குற்றவாளியை காவல்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை. இவை எல்லாவற்றையும் மறைப்பதற்காக ஒரு சர்வ கட்சி கூட்டம் என்று இல்லாத ஒரு பொருளை வைத்து கூட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது தமிழக மக்களை திசை திருப்புவதற்காக செய்யப்படுகிறது. எனவே தான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
முதலில் உண்மையான பிரச்சனையில் முதலமைச்சர் கவனம் செலுத்த வேண்டும். இல்லாத பிரச்சனைகளை பிடித்து இழுத்து..இழுத்து.. அதை நோக்கி கவனத்தை திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு பதிலாக உண்மை பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அதே மாதிரி சேகர் பாபு சொல்றாரு, இந்த கூட்டணி இரும்புக் கூட்டணி உடையா கூட்டணி.
இதையும் படிங்க: ஆதரவு தந்த பொன்னார், பி.எல் சந்தோஷ்..! வாய் திறக்காத தமிழிசை.. புகையும் பாஜக பூசல்!
திருமாவளவன் இன்னைக்கே ஆரம்பிச்சுட்டாரு நாங்க நாலு எம்எல்ஏ இருக்கோம் ரெண்டு எம்பி இருக்கிறோம், ஆனா எங்களால ஒரு கொடி கூட ஏற்ற முடியவில்லை என சொல்லியிருக்கிறார். கொடியேற்ற முடியவில்லை என்று தெருக்கோடியில் பிரச்சனை ஆரம்பமாகிவிட்டது. அதனால் இவங்க ஒரு பொய் தோற்றத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கூட்டணி பிரச்சனைகளை எல்லாம் மறைப்பதற்காகத்தான் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்திய திணிப்பை நாங்கள் எப்பொழுதுமே ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தம்பி உதயநிதி சொல்லியிருக்கிறார். மறுபடியும் மறுபடியும் சொல்கிறோம், இல்லாத திணிப்பை திணிப்பு திணிப்பு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நான் கேட்கிறேன் இவர்கள் எல்லாம் அரசாங்க பள்ளியில் தான் படிச்சாங்களா?, இவர்கள் குழந்தைகள் அரசாங்க பள்ளியில் தான் படிக்க வைக்கப்பட்டார்களா?. அரசு பள்ளி மாணவ மாணவிகளை வஞ்சிக்காதீர்கள். தனியார் பள்ளிகளுக்கு அத்தனை சலுகைகளையும் கொடுத்துவிட்டு, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளை நீங்கள் வஞ்சிக்கிறீர்கள். நீங்கள் எத்தனை பேர் அரசாங்க பள்ளியில் குழந்தைகளை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?. இல்லாத திணிப்பை திணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான் நான் வன்மையாக கண்டிக்கிறேன் எனக்கூறினார்.
இதையும் படிங்க: மிரட்டினால் பயப்பட நாங்க அதிமுக இல்ல திமுக.. பாஜக அரசை விளாசி தள்ளிய உதயநிதி ஸ்டாலின்.!