சென்னை செம்பியம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட திருவள்ளுவர் சாலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். காவலர்கள் வினோத்குமார் (வயது 36) தட்சிணாமூர்த்தி (வயது 40) ஆகியோர் பணியில் இருந்துள்ளனர். இரவு 12 மணியளவில் காவலர்கள் இருவரும் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவ்வழியாக சென்ற ஆட்டோ ஒன்று அதிவேகமாக வந்து காவலர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் வினோத்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் தட்சிணாமூர்த்திக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில் அவர் மருத்துவமனைக்கு சென்று முதலுதவி செய்து கொண்டு வீடு திரும்பினார்.

இது குறித்து இருவரும் செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். இதில் சரித்திர பதிவேடு ரவுடிகள் இந்த செயலில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து நேற்று அவர்களின் செல்போன் எண்ணை வைத்து ட்ராக் செய்தனர். பெரம்பூர் கேரேஜ் திருவள்ளுவர் சாலை பகுதியில் உள்ள ரயில்வே ட்ராக் ஓரமாக போலீசார் 2 பேரையும் மடக்கிப் பிடித்தனர். அப்போது போலீசாரிடம் இருந்து தப்பித்து ஓடும்போது சுவர் ஏறி குதித்ததில் இரண்டு பேருக்கும் கீழே விழுந்ததில் வலது கை உடைந்தது.
இதையும் படிங்க: பணம் தர மறுத்ததால் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மகன்..அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பத்தினர்..


இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று போலீசார் மாவு கட்டுப் போட்டனர். தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கொளத்தூர் பாலாஜி நகர் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 24) அதே பகுதியை சேர்ந்த பாலாஜி (வயது 22) என்பது தெரிந்தது. இருவர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. மேலும் சம்பவத்தன்று இவர்கள் இருவரும் இவர்களது நண்பரான ஆட்டோ ஓட்டுனர் டில்லி பாபு (வயது 26) என்ற நபருடன் குடித்துவிட்டு மூன்று பேரும் ஆட்டோவில் வந்துள்ளனர். அப்பொழுது போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருப்பதை பார்த்துள்ளனர்.

குடிபோதையில் நம்மை பிடித்தால் அபராதம் விதித்து விடுவார்கள் என்ற எண்ணத்தில் போலீசாரை அச்சுறுத்துவதற்காக வேகமாக ஓட்டி அவர்களை இடித்துவிட்டு சென்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து கோவிந்தராஜ் மற்றும் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்த செம்பியம் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஆட்டோ டிரைவர் டில்லிபாபு என்ற நபரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: இரவு முழுவதும் குடித்த கல்லூரி மாணவி... அதிகாலையில் நடந்த சோகம்!!