இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி. இவர் ஃப்ளோரிடா மாகாணத்தில தியேட்டர் ஆர்ட்ஸ் எனும் படிப்பை முடித்துவிட்டு உதவி இயக்குநராக பணியாற்றினார். பின்னர் தமிழ் திரையுலகிற்கு வந்த இவர், 1999 ஆம் ஆண்டு தனது தந்தையும் இயக்குநருமான பாரதிராஜா இயக்கிய தாஜ்மகால் படத்தில் ரியா சென்னுக்கு ஜோடியாக நடித்தார். மேலும் இந்த படத்தில் ஏச்சி எலுமிச்சி என்ற பாடலை இவர் பாடியிருந்தார். இதனிடையே ஏபிசிடி படத்தில் நடித்த நந்தனாவை காதலித்து வந்த நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவரும் சாதுரியன் என்ற படத்திலும் ஒன்றாக நடித்திருந்தனர். இவர்களுக்கு ஆர்த்திகா, மதிவதனி என்ற இரு மகள்கள் உள்ளனர். பின்னர் இவர் தமிழில் சமுத்திரம், கடல் பூக்கள் எனும் படத்திலும் நடித்திருந்தார். இந்த இரு படங்களையும் பாரதிராஜாதான் இயக்கியிருந்தார். பின்னர் ஈரநிலா, சாதுரியன், மகா நடிகன், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார். சமீபத்தில் சிம்பு நடித்த மாநாடு படத்திலும் ஜான் மேத்யூ எனும் போலீஸ் கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். அது போல் விருமன் படத்திலும் முத்துக்குட்டி எனும் கதாபாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்திருப்பார்.
இதையும் படிங்க: கேரளாவில் பாஜ நிர்வாகி சுட்டுக்கொலை.. வேட்டை துப்பாக்கியால் கதை முடிப்பு.. பேஸ்புக்கில் பதிவிட்டபடி அரங்கேறிய கொலை..!

கடந்த 2023 ஆம் ஆண்டு மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கியதன் மூலம் இவர் இயக்குநரானார். அவர் இயக்கிய இந்த முதல் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இதனிடையே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மனோஜ்-க்கு சிம்ஸ் மருத்துவமனையில் ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனது சேத்துபட்டு வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் கடந்த 3 நாட்களாக திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில் அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது எக்ஸ் தள பதிவில், நடிகரும் இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகனுமான மனோஜ் பாரதி மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். தனது தந்தையின் இயக்கத்தில் தாஜ்மகால் திரைப்படம் மூலம் அறிமுகமாகி, சமுத்திரம், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் எனத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் மனோஜ். இயக்கம் உள்ளிட்ட துறைகளிலும் முயன்று பார்த்தவர் மனோஜ். இளம் வயதில் அவர் எதிர்பாராதவிதமாக மறைந்துவிட்டது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அன்பு மகனை இழந்து வாடும் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: எமனாகிய ராஜநாகம்..! விஷம் ஏறி பாம்புப்பிடி வீரர் சந்தோஷ் மரணம்..!