புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் துணை நிலை ஆளுநர் உரையுடன் கடந்த 10ம் தேதி தொடங்கியது. பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 28ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்கியுள்ள நிலையில், பேரவைக்கு வருகை தந்த துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதனுக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டு முதல்வர் ரங்கசாமி வரவேற்றார்.

இந்நிலையில் நேற்று கூட்டத்தொடர் தொடங்கியதும், ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பாஜக ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ. அங்காளன் பேசும்போது, “ பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ரூ.5000 சரியாக தரப்பட்டுள்ளது. ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. பலர் வீடுகளையும், உடமைகளையும் இழந்துள்ளனர் என்றார். அப்போது குறிக்கிட்ட எதிர்கட்சி தலைவர் சிவா, பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் ஏன் உதவி கிடைக்கவில்லை, மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என பேசினார்.
இதையும் படிங்க: குடும்பத்தலைவிகளுக்கு ஜாக்பாட்... முதலமைச்சர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு...!
திமுக உறுப்பினர்களும் தங்கள் தொகுதி மக்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்ற விவாதத்தை முன் வைத்தனர். இவர்களுகு பதிலளிக்கும் விதமாக பேசிய அமைச்சர் லட்சுமி நாராயணன், அரசு நிவாரணம் தர மறுக்கவில்லை. கணக்கெடுப்பு நடந்து வருகிறது. நிதி ஒதுக்கி தருவோம். அது மத்திய அரசு நிதியா, மாநில அரசு நிதியா என்பதை முதல்வர் முடிவெடுப்பார் என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்களும், காங்கிரஸ் உறுப்பினர்கள் நிவாரணம் வழங்காததை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில் இன்று கூட்ட தொடர் தொடங்கியதும் சட்டப்பேரவையில் அமளி ஏற்பட்டது. புதுச்சேரியில் மும்மொழி கொள்கைதான் அரசின் கொள்கை என அமைச்சர் நமச்சிவாயம் பேசினார். மேலும் புதுச்சேரி மக்கள் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம் பேசுவதால் 4 மொழி கொண்ட மாநிலமாக திகழ்வதாகவும் கூறினார். அமைச்சரின் இந்த பேச்சுக்கு சட்டப்பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது. அமைச்சரின் பேச்சை கண்டித்த திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டமன்றத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
இதையும் படிங்க: சூப்பர் ஐடியா..! நாடாளுமன்றத்தில் குறைத்தால் சட்டமன்றத்தில் கூட்டுவோம்: திருப்பியடிக்கும் திருமா..!