மகாராஷ்டிரா மற்றும் டெல்லி சட்டமன்ற தேர்தல்களின் போது வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டை எழுந்தது. மேலும் மேற்கு வங்காள மாநிலம் கூச் பெகர்பகுதியில் உள்ள ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணும், உத்தரபிரதேச மாநிலம் திதர்கஞ்ச் பகுதியில் உள்ள ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணும் ஒன்றாக உள்ளன என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.

இதன்மூலம் போலி வாக்காளர்கள் மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்த வாக்காளர்கள் மேற்கு வங்காளத்தில் உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி இருந்தார்.
இதையும் படிங்க: முதல்வர் ஸ்டாலின் செய்வது கொஞ்சமும் சரியல்ல.. கடுகடுத்த மத்திய அமைச்சர் ஜோஷி..!
அவர்கள் போலி வாக்காளர்கள் அல்ல என்று கூறிய தேர்தல் ஆணையம், எண்கள் ஒரே மாதிரி இருந்தாலும், புகைப்படம், தொகுதி, வாக்குச்சாவடி விவரங்கள் வெவ்வேறாகவே இருக்கும் என்றும், எனினும் இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ள திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தின.

இது தொடர்பான விவகாரம் பாராளுமன்றத்தில் எதிரொலித்த நிலையில், அரசியல் கட்சிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி அவர்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தீர்வு கண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கடந்த வாரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் போது தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. அதில், சட்ட விதிகளுக்கு உட்பட்டு தேர்தல் நடைமுறைகளை சீர்படுத்துவது தொடர்பாக நடக்கும் கூட்டத்தில் அரசியல் கட்சிகள் பங்கேற்க வேண்டும் என்றும் கட்சிகளின் வசதிக்கு ஏற்ப தேதியில் கூட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் இருந்தால் அது குறித்து ஆலோசனைகளை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வாட் ப்ரோ...இது ராங்க் ப்ரோ... விஜய்யை கலாய்த்த ப்ளூ சாட்டை மாறன்!!