மின்சாரத்தை நுகர்வோருக்கு வினியோகம் செய்ததற்காக 2017 முதல் 2021ம் ஆண்டு வரை 1,100 கோடி ரூபாய் வரி செலுத்துவது தொடர்பாக ஜி.எஸ்.டி பிறப்பித்த நோட்டீஸ் மீதான விசாரணையை நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, தமிழ்நாடு மின் வினியோக கழகம் எனும் டான்டிரான்ஸ்கோ நிறுவனம், மின்சாரத்தை பகிர்மானம் செய்து வருகிறது. சரக்கு மற்றும் சேவை வரி எனும் ஜி எஸ் டி வரி நடைமுறை அமலுக்கு வந்த 2017ம் ஆண்டுக்கு பின், மின்சாரம் பகிர்மானம் செய்ததற்காக 2017ம் ஆண்டு முதல் 2021 ம் ஆண்டு வரையிலான நான்கு நிதியாண்டுகளுக்கு 1,100 கோடி ரூபாயை ஜி.எஸ்.டி. வரியாக செலுத்தக் கூறி, டான்டிரான்ஸ்கோ நிறுவனத்துக்கு ஜி.எஸ்.டி. வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதையும் படிங்க: பட்ஜெட் 2025: கவலையில் கல்வித்துறை! குறைந்த நிதி, அதிக ஜிஎஸ்டி, குறைவான முதலீடு எப்போது களையப்படும்?

இதை எதிர்த்து டான் டிரான்ஸ்கோ நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்த போது, டான் டிரான்ஸ்கோ தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ஜி எஸ் டி வரி முறை அமலுக்கு வரும் முன், டான் டிரான்ஸ்கோ நிறுவனத்துக்கு சேவை வரி விதிப்பில் இருந்து விலக்களிக்கப்பட்டிருந்தது. தற்போது ஜி.எஸ்.டி. வரி விதிப்பது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது சட்டவிரோதமானது என வாதிட்டார்.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, டான் டிரான்ஸ்கோ-வுக்கு ஜி எஸ் டி வரி விதிப்பது தொடர்பான விசாரணை நடவடிக்கையை நிறுத்தி வைத்து, வழக்கு விசாரணையை ஏப்ரல் 7ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா விதிகளுக்கு உட்பட்டு நடக்கிறதா..? உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு..!