ஈஷா யோகா மைய சிவராத்திரி நிகழ்ச்சிக்காக தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அனைத்து விதிகளும் பின்பற்றபடுவதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஈஷா யோகா மையம் நடத்தவுள்ள மகாசிவராத்திரி நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க எதிர்ப்பு தெரிவித்து கோவையை சேர்ந்த சிவஞானன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அரசு நிர்ணயித்துள்ள ஒலி அளவான 45 டெசிபல் ஒலி அளவை விட அதிமான அளவில், வனப்பகுதியில் நிகழ்ச்சி நடத்தப்படுவதால் வெள்ளியங்கிரி வனச்சூழல் மிகுந்த பாதிப்புக்குள்ளாவதாக மனுவில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா விதிகளுக்கு உட்பட்டு நடக்கிறதா..? உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு..!
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சிவராத்திரி விழாவின் போது விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும் படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், மற்றும் ராஜசேகர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஈஷாவில் மகாசிவராத்திரி விழாவின் போது அனைத்து சட்ட விதிகளும் பின்பற்றப்படுவதாகவும், விதிகள் அமல்படுத்தப்படுவதை மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட மனுதாரர், விதிகளை மீறி இரவு நேரங்களில் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்படுவாதகவும் இதன்மூலம் ஒலிமாசு ஏற்படுத்தப்படுகிறது என்று தெரிவித்தார்.

ஈஷாவில் முறையான கழிவுநீர் சுத்திகரிப்புக்காக மூன்று புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, சிவராத்திரி நிகழ்ச்சிக்கு 7 லட்சம் மக்கள் வருகை தரும் நிலையில் இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் போதுமானவை அல்ல என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஈஷா வளாகத்தில் உள்ள கல்வி நிறுவன கட்டிடத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் 70 ஏக்கர் நிலத்தில் தான் விழா நடப்பதாகவும், சரவணம் பட்டியில் வசிக்கும் மனுதாரர் எப்போதெல்லாம் சிவராத்திரி விழா வருகிறதோ அப்போதெல்லாம் பக்கத்து நிலத்துக்காரர் ஆகிவிடுவதாக ஈஷா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், ஒலி மாசு கட்டுப்படுத்தவும், கழிவு நீர் சுத்திகரிப்புக்கும் போதுமான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ள நிலையில், வெறும் அச்சத்தின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் எந்த காரணமும் இல்லை எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா விதிகளுக்கு உட்பட்டு நடக்கிறதா..? உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு..!