கர்நாடகாவில் இஸ்லாமியர்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை பாஜக எதிர்த்து வரும் நிலையில் அதன் கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதாதளம் கொள்கையிலிருந்து விலக முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கர்நாடக அரசு ஒப்பந்த பணிகளில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கிட்டை எதிர்க்க மறுக்கும் கூட்டணி கட்சியான மத சார்பற்ற ஜனதாதளம் போராட வேண்டும் என்று பாஜக அழுத்தம் கொடுத்து வருகிறது. அம்மாநிலத்தில் அரசு துறைகளின் ஒப்பந்த பணிகளை மேற்கொள்வதில் பட்டியலின ஒப்பந்ததாரர்களுக்கு 24% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஒப்பந்த பணிகளை செய்வதில் முஸ்லிம் ஒப்பந்ததாரர்களுக்கு 4% இட ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை முடிவு செய்தது.
இதையும் படிங்க: 18 பாஜக எம்எல்ஏக்கள் 6 மாதங்களுக்கு இடைநீக்கம் - நடந்தது என்ன?

அம்மாநிலத்தில் அரசியல்வாதிகளை பெண்களை வைத்து மயக்கி ஆபாச வீடியோ எடுக்கும் ஹனி ட்ராப் மோசடி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று முதலமைச்சர் சித்தராமைய்யா உறுதியளித்தார். இந்நிலையில் சிபிஐ விசாரணை கோரி நேற்று முன்தினம் சட்டப்பெறவையில் பாஜக, மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

அதனிடையே சட்ட அமைச்சர் ஹெச் கே பாட்டில் அரசு ஒப்பந்த பணிகளில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை தாக்கல் செய்தார். அமளிக்கு இடையே அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக பாஜக தலைவர் ஜெயந்திரா, முஸ்லிம்களுக்கு 4% இட ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார். இந்நிலையில் பெங்களூருவில் நடந்த மதசார்பற்ற ஜனதாதள கூட்டத்தில் முஸ்லிம் இட ஒதுக்கீடு மசோதாவை எதிர்க்க கூடாது என்பதே கட்சியின் நிலைப்பாடு என்றும், அதற்கு எதிராக பாஜக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

முஸ்லிம்களுக்கு 4% இட ஒதுக்கீட்டை வழங்குவது கட்சியின் தலைவர் தேவகௌடாவின் கொள்கை என்றும், மதசார்பற்ற ஜனதாதள வட்டாரங்கள் தெரிவித்தன. விலைவாசி உயர்வு, ஊழல் உள்ளிட்டவற்றிற்கு எதிராக பாஜகவுடன் இணைந்து போராடுவது வேறு என்றும், கொள்கையிலிருந்து விலக போவதில்லை என்றும் அக்கட்சி தலைவர்கள் தெரிவித்தனர். இதனிடையே எதிர்கட்சி தலைவர் அசோகா இந்த விவகாரத்தில் மதசார்பற்ற ஜனதாதளம் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தினார் . இந்த விவகாரத்தில் நிலைப்பாட்டை மாற்றுவது தொடர்பாக அக்கட்சியுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வாரம் 2 சரக்கு பாட்டில்கள் மக்களுக்கு இலவசமாகக் கொடுங்க முதல்வரே..! சட்டசபையில் கெஞ்சிய எம்.எல்.ஏ..!