தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையில் உள்ள காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காண காவிரி ஒழுங்காற்று குழு உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக ஆணையத்தின் சார்பில் அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தப்பட்டு தொடர்புடைய மாநிலங்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 36 கூட்டங்கள் நடந்து முடித்திருக்கிறது.
இந்த நிலையில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 111-ஆவது கூட்டம் குழுவின் தலைவர் வினீத் குப்தா தலைமையில் காணொலி வழியாக நடைபெற்றது. தமிழக உறுப்பினரும், திருச்சி மண்டல தலைமைப் பொறியாளருமான தயாளகுமார், தமிழக அரசின் காவிரி தொழில்நுட்ப குழுத் தலைவர் ஆர்.சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், கடந்த ஆண்டு ஜூன் 1- ஆம் தேதி முதல் நிகழாண்டு ஜனவரி 27-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மேட்டூர், பவானிசாகர், அமராவதி போன்ற காவிரி தொடர்பான அணைகளின் தற்போதைய நீர் வரத்து, நீர் இருப்பு போன்ற விவரங்களை தமிழக உறுப்பினர் தயாளகுமார் முன்வைத்தார்.
இதையும் படிங்க: காவிரி, வைகை, குண்டாறு நதிகள் இணைப்பு: தமிழக அரசுக்கு தடை இல்லை; கர்நாடகத்தின் கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
உச்சநீதிமன்றத்தால் திருத்தியமைக்கப்பட்ட உத்தரவின்படி தமிழகத்திற்கு காவிரியில் பிலிகுண்டுலுவில் கர்நாடகம் அணைகளிலிருந்து வழங்கவேண்டிய 166.894 டிஎம்சி}க்கு பதிலாக இதுவரை 285.999 டிஎம்சி தண்ணீர் பெறப்பட்டுள்ளது என்றும், அதே சமயம் நிகழ் ஜனவரி மாதம் வழங்கப்படவேண்டிய தண்ணீர் அளவில் 2.760 டிஎம்சிக்குப் பதிலாக இதுவரை 1.723 டிஎம்சி தண்ணீர் மட்டுமே பெறப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கு கர்நாடக உறுப்பினர் மகேஷா பதிலளிக்கையில், மேட்டூர் அணை நிகழாண்டு மூன்று முறை நிரம்பும் அளவிற்கு கர்நாடகம் கூடுதலாக தண்ணீர் திறந்துவிட்டது எனத் தெரிவித்து கர்நாடக அணைகளின் நீர் இருப்பு விவரங்களையும் குறிப்பிட்டார். இதற்கு தமிழக அரசின் பிரதிநிதியும், காவிரி தொழில்நுட்ப குழுத் தலைவரான ஆர். சுப்பிரமணியம் கடும் கண்டனத்தை முன் ம வைத்தார்.
அப்போது அவர் "மேட்டூர் அணை மூன்று முறை நிரம்பியதற்கு காரணம் தமிழக அரசின் நீர் மேலாண்மையாகும். கன மழை, புயல் போன்ற பல்வேறு சூழ்நிலையில் தண்ணீரை முறைப்படி வெளியேற்றியதால் அணை நிரம்பியது. ஜன.27 நிலவரப்படி மேட்டூர் அணையில் உள்ள நீர் இருப்பு 79.807 டிஎம்சியாக உள்ளது.
மேலும், ஜன.28-ஆம் முதல் மேட்டூர் அணையில் பாசனத்திற்காக வெளியேற்றப்பட்டு வந்த நீர் நிறுத்தப்பட்டது.

நிகழ் மாதத்தில் வழங்க வேண்டிய தண்ணீரில் 1.55 டிஎம்சி தண்ணீர் பாக்கியுள்ளது. உச்சநீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட அளவுகளின்படி, மாதந்தோறும் வழங்க வேண்டிய நீர் ஓட்டத்தை கர்நாடகம் பிலிகுண்டுலுவில் எக்காரணம் கொண்டும் நிறுத்தக் கூடாது.
குறிப்பாக, அடுத்த பிப்ரவரி மாதம் முதல் மே வரை தமிழகம் பாசனத்திற்கு தண்ணீரை திறப்பதில்லை. இருப்பினும், இந்தக் காலகட்டத்தில் குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்கு மாதந்தோறும் வழங்க வேண்டிய 2.5 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் கண்டிப்பாக வழங்க வேண்டும். பிப்ரவரி முதல் மே வரை மொத்தம் 10 டிஎம்சி தண்ணீரை தமிழகம் பெறுவதற்கு சி.டபிள்யு.ஆர்.சி. நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

மேலும், இந்திய வானிலை ஆய்வுத்துறை சார்பில், 2024-2025 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவ மழையால் காவிரிப் படுகையில், இயல்பைவிட சற்று அதிகமாக மழை பெய்துள்ளது. அடுத்த இரண்டு வாரங்களில் காவிரி டெல்டா பகுதிகளில் மழை இயல்பைவிட சற்று கூடுதலாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் ரூ.300 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கப்பிரிவு நடவடிக்கை