காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைக் கட்டுவதற்கான ஆயத்தப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதாகவும், மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் மேகதாது அணை கட்டி முடிக்கப்படும் என்றும் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்திருக்கிறார். மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிரமாக முயன்று வரும் நிலையில் அதைத் தடுக்காமல் மத்திய அரசும், தமிழக அரசும் வேடிக்கைப்பார்ப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கவலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...
மேகதாதுவில் அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடகம் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில் அதை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது நல்லதல்ல. காவிரி ஆற்றின் குறுக்கே தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடகத்திற்கு எந்த உரிமையும் இல்லை. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படியும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படியும் கடைமடை பாசன மாநிலமான தமிழ்நாட்டின் ஒப்புதல் இன்றி மேகதாது அணையை கட்ட முடியாது. அவ்வாறு இருக்கும் போது மேகதாது அணைக்கான ஆயத்தப் பணிகளை கர்நாடக அரசு மேற்கொள்வதே சட்டவிரோதம் ஆகும்.
இதையும் படிங்க: ராம்சார் விருது பெறும் ஜெயஸ்ரீ வெங்கடேசன்... வாழ்த்து கூறிய அன்புமணி..!
கர்நாடகத்தில் காவிரி மற்றும் துணை நதிகளின் குறுக்கே இப்போதுள்ள அணைகளின் கொள்ளளவு 114.57 டி.எம்.சி ஆகும். இவ்வளவு கொள்ளளவுள்ள அணைகள் இருக்கும் போதே கர்நாடகம் தமிழகத்துக்கு தண்ணீர் தருவதில்லை. 70 டி.எம்.சி கொள்ளளவுள்ள மேகதாது அணை கட்டப்பட்டால் கர்நாடக அணைகளின் கொள்ளளவு 184 டி.எம்.சி.யாக அதிகரிக்கும். மேட்டூர் அணை கொள்ளளவை விட கிட்டத்தட்ட இரு மடங்கு தண்ணீரை கர்நாடகம் தேக்கி வைத்தால் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காது. காவிரி படுகை பாலைவனமாகிவிடும்.

ஆனால், மத்திய அரசும், தமிழக அரசும் இதைக் கருத்தில் கொள்ளாமல் கர்நாடகத்தின் செயல்களை கண்டுகொள்ளாமல் இருப்பதால் தான் அணைக்கான ஆயத்தப் பணிகளை முடிக்கும் அளவுக்கு கர்நாடகம் சென்றிருக்கிறது. மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்திற்கான முதல் துரோகம் கடந்த 2018-ம் ஆண்டில் தான் இழைக்கப்பட்டது. அப்போது தான் மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதை வைத்துக் கொண்டு தான் மேகதாது அணைக்கான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயாரித்து, அதனடிப்படையில் அனுமதி கோரி வருகிறது.
அதற்கு அடுத்த துரோகம் 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இழைக்கப்பட்டது. மேகதாது அணைக்கான திட்ட அறிக்கையை ஆய்வு செய்து, அனுமதி அளிக்கும் பொறுப்பு காவிரி மேலாண்மை ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. ஆனால், காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அந்த அதிகாரம் இல்லை என்று கூறி, மேகதாது அணை குறித்து விவாதிக்க தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க 2018-ம் ஆண்டில் மத்திய அரசு அளித்த அனுமதியை ரத்து செய்வது தான் மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை நிரந்தரமாகத் தடுப்பதற்கான ஒரே வழியாகும். அதை மத்திய அரசு உடனடியாக செய்வதுடன், மேகதாது அணை குறித்த எந்த பணியையும் மேற்கொள்ளக்கூடாது என கர்நாடக அரசை எச்சரிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஒரு கிலோ தக்காளி ரூ.3... சாலையில் கொட்டப்படும் அவலம்...!