ரவுடிகளை ஒழிக்க பிரத்யேக நடவடிக்கை எடுப்பதால் காழ்ப்புணர்ச்சியோடு இதுபோல வழக்குகள் தொடரப்படுகிறது என அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா வாதம்.
மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்கிற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கில், கிருஷ்ணகுமார் என்கிற வாராகி மீதான வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பில் வராகி மீது உள்நோக்கத்துடன் பொய் வழக்கு பதியப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளதாகவும், அதனால் காவல்துறை தலைமை இயக்குநர் உடனடியாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அருன் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் நீதிமன்றமே இது பொய்யான வழக்கு மற்றும் உள்நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்ட வழக்கு என கூறியுள்ளதால், பொய்யான வழக்கை பதிவு செய்த காவல்துறை ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
இதையும் படிங்க: சாதிவாரி கணக்கெடுப்புக் கோரி சீமான் நடத்தும் பேரணி.. அனுமதி தருவது குறித்து நீதிமன்றம் நாளை முடிவு..!
அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகம்மது ஜின்னா, ஒவ்வொரு வழக்கு விசாரணையின் போதும் அந்த வழக்கின் நிவாரணத்திற்கு ஏற்ப சில கருத்துகளை நீதிமன்றங்கள் தெரிவிப்பது வழக்கம் என்று குறிப்பிட்டார்.

அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தை யாரும் வலியுறுத்த முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகளை கவனத்தில் கொள்ளாமல் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
அதனால் புலன் விசாரணை அதிகாரியோ, விசாரணை நீதிமன்றமோ அதை கருத்தில் கொள்ளாமல் புலன் விசாரணையும், வழக்கு விசாரணையும் நடத்தும் என்றும், குற்றம்சாட்டப்பட்டவரும் இதை காரணம் காட்டி வழக்கை ரத்து செய்ய கோர முடியாது என்றார்.
மேலும் சென்னை மாநகர காவல்துறை ஆணையராக அருண் பொறுப்பேற்ற பிறகு ரவுடியிஸத்தை முழுமையாக ஒழிக்க பிரத்யேக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவை( Organized Crime Unit) நுண்ணறிவு பிரிவில் உருவாக்கி தலைமறைவாக இருந்த பல ரவுடிகளை கைது செய்து பல்வேறு சமூக விரோத தடுப்பு முன்னெடுப்புகளை செய்வதால் காழ்ப்புணர்வோடு இப்படிப்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஜின்னா வாதிட்டார்.

எனவே, இதுபோன்ற வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன், வேறொரு வழக்கின் தீர்ப்பில் சொல்லப்பட்ட கருத்துகளின் அடிப்படையாக கொண்டு, காவல் துறை ஆணையரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார்தார்ர் கேட்க எந்தவித முகாந்திரமும் இல்லை என்று உத்தரவிட்டுள்ளார்.
சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட வழக்குகளின் விசாரணையை நீதிமன்ற கருத்துகளின் தாக்கமின்றி தன்னிச்சையாக விசாரித்து குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தாலோ அல்லது, நீதிமன்றத்தில் வழக்கு தீர்ப்பின் முடிவின் மூலமாக மட்டுமே உள்நோக்கத்துடன் பதியப்பட்ட பொய் வழக்கா அல்லது உண்மையான வழக்கா? என அறிய முடியும் என்று தெரிவித்த நீதிபதி இளந்திரையன், நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் காவல் துறை ஆணையரின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: நீதிபதி முன்பு காட்டுக்கூச்சல் போட்ட மனுதாரர்.. இது சந்தையா? நீதிமன்றமா? என கொந்தளித்த நீதிபதி..!