காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற் போக்கு கூட்டணி ஆட்சியின் போது உணவு பணவீக்கம் அதிக அளவில் இருந்தது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டி இருந்தார். அதற்கு பதிலடி கொடுத்த பிரியங்கா காந்தி, "நிர்மலா சீதாராமன் எந்த எந்த கிரகத்தில் வாழ்கிறார்?" என்று கேட்டார்.
நாடாளுமன்ற மக்களவையில் மத்திய பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "பண வீக்க மேலாண்மை, இந்த அரசாங்கத்தின் மிக உயர்ந்த முன்னுரிமை பெறுகிறது. ஒட்டுமொத்தமாக சில்லறை பண வீக்கம் 2 - 6 சதவீத அறிவிக்கப்பட்ட சகிப்புத்தன்மையின் வரம்பிற்குள் உள்ளதாக" கூறியிருந்தார்.

அதே நேரத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாவது பதவிக்காலத்தில் உணவு பணவீக்கம் அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் 11 சதவீதமாக இருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: நிர்மலா சீதாராமன் உயர்வுக்கு பெரியார் தான் காரணம்: இந்தியை எதிர்க்கவில்லை: கொளுத்தி போட்ட தயாநிதி மாறன்
'பின்னர் வந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தின் கீழ் உணவு பணவீக்கம் 2016 முதல் 2024 வரை 5.3 சதவீதமாக குறைந்துள்ளது' என்றும், 'ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் காணப்பட்ட இரட்டை இலக்க பணவீக்கம் 10 சதவீதம்" என்றும் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டி இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவரும் எம்பியுமான பிரியங்கா காந்தி, "நிர்மலா சீதாராமன் பணம் வீக்கம் இல்லை, விலைவாசி உயர்வு இல்லை; வேலையில்லா திண்டாட்டம் இல்லை என்று கூறுகிறார். அவர் எந்த கிரகத்தில் வாழ்கிறார் என்று எனக்கு தெரியவில்லை" என்று தாக்குதல் தொடுத்தார்.
பிரியங்கா காந்தி மட்டுமல்ல திருணாமுல் காங்கிரஸ் கட்சியும் நிர்மலா சீதாராமன் கருத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தது. அந்தக் கட்சியின் சமூக வலைத்தளப்பதிவில் "மத்திய நிதியமைச்சர் ஒரு பாறையின் கீழ் வாழ்ந்து வருகிறார்" என்று, அதில் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.

"வங்காளத்தில் வேலைகள் இல்லை, தொழிற்சாலைகள் இல்லை, தொலைநோக்கு பார்வையில்லை என்று கூற நிர்மலா சீதாராமன் என்ன ஒரு பாறையின் கீழ் தான் வாழ்ந்திருக்க வேண்டும்" என்று அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கூட்டணி அரசின் மீது குற்றம் சுமத்திய நிர்மலா சீதாராமன் தனது நாடாளுமன்ற உரையில் "கடந்த 2008 ஆம் ஆண்டில் ஐந்து பலவீனமான பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்று; தற்போது இந்தியா 5 வேகமான பொருளாதாரங்களில் ஒன்றாக வளர்ந்து வருவதாக" கூறியிருந்தார்.

"இந்தியாவில் வேலை இல்லா விகிதம் 2017 ம் ஆண்டில் 6 சதவீதத்திலிருந்து 2024 இல் மூன்று சதவீதமாக குறைந்து இருப்பதாகவும்" அவர் மேலும் தெரிவித்தார். இது மத்திய அரசின் "ரோஸ்கர் மேளா" முயற்சியை எடுத்துக் காட்டுவதாகவும்" அப்போது அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மத்திய பட்ஜெட்டால் யாருக்கு பலன்? நடுத்தர குடும்பத்தினரா, கோடீஸ்வரர்களா? புள்ளிவிவரங்களை அடுக்கிய ப.சிதம்பரம்