கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது, ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ராஜ கண்ணப்பன், கடந்த 2021 மார்ச் 27 ஆம் தேதி, தொகுதியில் உள்ள கருங்குளம், கோழிபத்தி கிராமங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
அப்போது தேர்தல் விதிகளை மீறி, திமுக கொடி கம்பங்களை நட்டு, தோரணங்கள் கட்டி பிரச்சாரம் செய்ததாக பேரையூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, ராமநாதபுரம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இதேபோல, சிவகங்கை மாவட்டம், மானா மதுரை தொகுதி திமுக வேட்பாளர் தமிழரசி ஆதரித்து, 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி ராஜ கண்ணப்பன் பிரச்சாரம் செய்தார். அப்போது தேர்தல் விதிகளை மீறி, 15 வாகனங்களில் பிரச்சாரம் செய்ய வந்ததாகவும், பட்டாசு வெடித்ததாகவும் சாலைக்கிராமம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சிவகங்கை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜிக்கு எதிரான மனு.. ஒத்தி வைத்த உயர்நீதிமன்றம்..!
இந்த இரு தேர்தல் விதிமீறல் வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்கவும், வழக்குகளை ரத்து செய்யவும் கோரி அமைச்சர் ராஜ கண்ணப்பன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த இரண்டு வழக்குகளில் ஒரு வழக்கில் அதிகபட்சம் ஒரு ஆண்டு மட்டுமே தண்டனை விதிக்க முடியும். மற்றொரு வழக்கில் அபராதம் மட்டுமே விதிக்க முடியும். மூன்று ஆண்டுகள் தாமதமாக வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் கிழமை நீதிமன்றம் அதனை கோப்புக்கு எடுத்திருக்க கூடாது என்ற அமைச்சர் தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதி, இரு தேர்தல் விதிமீறல் வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதேபோல, திருச்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ இனிக்கோ இருதயராஜ்க்கு எதிரான கொரோனா விதிமீறல் வழக்குகளையும் ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ஆன்லைன் விளையாட்டுகளுக்கு நேர கட்டுப்பாடு.. இளைஞர்களின் நலன்களுக்காகவே..!