காங்கிரஸில் இணைகிறாரா விஜய சாய் ரெட்டி? காங்கிரஸ் தலைவர் ஷர்மிளாவுடன் திடீர் சந்திப்பு
ஆந்திர மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பியுமான வி. விஜயசாய் ரெட்டி காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளாவை திடீரென சந்தித்துப் பேசியுள்ளார். இதனால் காங்கிரஸில் விஜய சாய் ரெட்டி இணையப் போகிறாரா என்று அரசியல்வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
அரசியலில் இருந்து விலகுகிறேன் எனக் கூறி, ஒய்எஸ்ஆர் கட்சி அளித்த மாநிலங்களவை எம்.பி. பதவியையும் சமீபத்தில் விஜய் சாய் ரெட்டி ராஜினாமா செய்தார். இப்போது திடீரென காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஷர்மிளாவைச் சந்தித்துள்ளது, விஜய் சாய் ரெட்டி அரசியல் பிரவேசத்தின் 2.0 தொடங்குகிறதா என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
ஆந்திர முன்னாள் முதல்வரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டிக்கு மிகவும் நெருக்கமானவரும், அவரின் நம்பிக்கைக்கு உரியவராக விஜய் சாய் ரெட்டி இருந்தார். ஒய்எஸ்ஆர் உயிருடன் இருந்த காலத்தில் இருந்த அவரின் குடும்பத்தோடு நெருக்கமாக இருந்த விஜய் சாய் ரெட்டி, ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியைப்பிடிக்க வியுகங்களை அமைத்துக் கொடுத்தவர்.
இதையும் படிங்க: டெல்லியில் 3-வது முறையாக ஆட்சியைப் பிடிக்குமா ஆம் ஆத்மி? கடும் போட்டியில் பாஜக - காங்கிரஸ்
அது மட்டுமல்லாமல் ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, மத்தியில் பிரதமர் மோடிக்கும், ஜெகன்மோகன் ரெட்டிக்கும் இடையே சுமூகமான நட்பு ஏற்படவும், மத்திய அரசுடன் இணக்கமாகச் செல்லவும் விஜய் சாய் ரெட்டி காரணமாக அமைந்திருந்தார்.
கடந்த மாதம் 30ம் தேதி காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஷர்மிளாவை அவரின் இல்லத்தில் திடீரென சந்தித்துள்ளார் விஜய சாய் ரெட்டி. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விஜய சாய் ரெட்டி ஏன் விலகினால், எம்.பி. பதவியை ஏன் ராஜினாமா செய்தார் என்பதற்கான காரணங்கள் தெரியாமல் அரசியல் வட்டாரத்தில் குழப்பமாக இருந்தது.
விஜய சாய் ரெட்டி தனது விளக்கத்தில் கூட “ சொந்த காரணங்களுக்காத்தான் கட்சியிலிருந்து விலகுகிறேன், எம்.பி.பதவியை ராஜினாமா செய்கிறேன். ஜெகன் மோகன் ரெட்டியுடனான நட்புறவு, அவரின் குடும்பத்துடனான உறவு தொடரும், நன்றியுடன் இருப்பேன்” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ஷர்மிளாவை விஜய் சாய் ரெட்டி திடீரென சந்தித்தது அடுத்த என்ன நடக்கப் போகிறது என்று அரசியல் நோக்கர்களை சிந்திக்க வைத்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் ஷர்மிளா, விஜய் சாய் ரெட்டி இடையிலான சந்திப்பு, பேச்சு 3 மணிநேரம் வரை நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் தலைவர் ஷர்மிளாவின் உடன்பிறந்த சகோதரர்தான் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜெகன்மோகனுக்கும், ஷர்மிளாவுக்கும் இடையே சமீபத்தில் சொத்துத் தகராறும் ஏற்பட்டு, இருவரும் ஒருவரையொருவர் ஊடகங்களில் விமர்சித்துக்கொண்டனர்.
இதற்கு முன் ஜெகன்மோகன் ரெட்டியுடன் விஜய் சாய் ரெட்டி இருந்தபோது, சொத்துத் தகராறில் ஷர்மிளாவுக்கு எதிராக விஜய் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணனிடம் இருந்து விலகிய விஜய் சாய், தற்போது தங்கை ஷர்மிளாவைச் சந்தித்ததுதான் அரசியலில் புதிராக இருக்கிறது.
மாநிலங்களவை எம்.பி. பதவியை விஜய் சாய் ரெட்டி ராஜினாமா செய்தபோது, ஷர்மிளா விடுத்த கோரிக்கையில் “ குறைந்தபட்சம் ஒய்எஸ் விவேகானந்தா ரெட்டி கொலை வழக்கில் இப்போதாவது உண்மையைப் பேச வேண்டும் விஜய் சாய் ரெட்டி” எனக் கோரிக்கை விடுத்திருந்தார். ஆதலால், ஆந்திர அரசியலில் வரும் நாட்களில் திடீரென மாற்றங்கள், பரபரப்பு காட்சிகல் நடக்கலாம் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிரொலித்த கும்பமேளா விவகாரம்...