தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். தன்மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார்.. அந்த மனுவை நிராகரித்த நீதிபதிகள் மூன்று மாத காலத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர். இதனை அடுத்து வழக்கின் விசாரணையை போலீசார் துரிதப்படுத்தி உள்ளனர்.

அவ்வப்போது நடிகை விஜயலட்சுமி சமூக வலைத்தளங்களில் சீமான் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அரசியல் வட்டாரத்தில் சீமான் மீதான இந்த குற்றச்சாட்டு பெரும் பேசுப் பொருளாக மாறி வந்தது. தற்போது நடிகை விஜயலட்சுமியிடம் உள்ள ஆடியோ உள்ளிட்ட ஆதாரங்களை போலீசார் கைப்பற்றி வருகின்றனர். மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு சீமானுக்கு சம்மன் அனுப்பியும் அவர் வரவில்லை. இதனால் அவரது வீட்டின் முன்பு சம்மன் ஒட்டப்பட்டது.
இதையும் படிங்க: ஊடகத்தில் வாய்ச்சவடால் விடும் அண்ணாமலை அனைத்து கட்சி கூட்டத்திற்கு வந்து பேசட்டும்- முத்தரசன் விளாசல்

அதனை அவரது காவலாளர்கள் கிழித்தெறிந்த நிலையில் அவர்களுக்கு மார்ச் 13ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. இது போன்ற சர்ச்சைகள் வெடித்து வரும் நிலையில், திமுக அரசின் தூண்டுதலால் தான் நடிகை விஜயலட்சுமி இவ்வாறு செய்து வருவதாக குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முதலமைச்ச ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார்.

தன்னை சமாளிக்க முடியாமல் தான் திமுக அரசு அடிக்கடி ஒரு பெண்ணை அழைத்து வருகிறது என்று விமர்சித்துள்ளார். 234 தொகுதிகளிலும் திமுகவால் வேட்பாளர்களை நிறுத்த முடியுமா என சவால் விடுத்துள்ளார் சீமான். எவ்வளவு வழக்குகள் இருந்த போதும் என் மீது ஏன் இவ்வளவு வேகம் காட்டுகின்றனர் என கேள்வி எழுப்பியுள்ள அவர், நான் தான் பெரிய தலைவன் என்னை எதிர்க்க முடியுமா? ஓட்டுக்கு காசு கொடுக்காமல் பத்தாயிரம் வாக்குகள் பெற முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

2026 ஆம் ஆண்டு தேர்தலில் தனித்து நின்று வென்று காட்டுவோம் கருணாநிதி மகனா, பிரபாகரன் மகனா.. என நின்று பார்ப்போம் என சவால் விடுத்துள்ளார்.தான் ஒரு சாதாரண விவசாயி மகன்., தன் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் அஞ்சு போவதில்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு என்ன ஆனது? அந்த சார் என்பது எந்த சார்? அதிகாரம் நிலையானது என்று எதையும் செய்யாதீர்கள் என்று கூறிய சீமான் மாலை 6 மணியளவில் விசாரணைக்குச் செல்வேன் என தெரிவித்துள்ளார். நான் எதற்கும் அஞ்ச மாட்டேன் என்றும் சீமான் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் ஒரு தொகுதி கூட குறையாது... முதல்வர் மு.க.ஸ்டாலின் முகத்தில் கரியைப் பூசிய அமித் ஷா...!