அகில இந்திய ஆராய்ச்சி மாணவர்கள் உச்சி மாநாடு சென்னை ஐஐடியில் நடைபெற்றது. இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறுகையில்," இந்தியர்கள் அறிவியலிலும் கணிதத்திலும் சிறந்தவர்கள். ஆங்கில மொழித் திறன் வாயிலாக இன்னும் வளர்ந்துள்ளோம். இன்றைய தினம் இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தில் நாம் முன்னணியில் இருந்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா உலக அளவில் அதிக ஜிடிபி வளர்ச்சி விகிதத்தையும் பெற்றுள்ளது. பொருளாதாரத்தில் அடுத்த ஆண்டுக்குள் 4-வது இடத்தை இந்தியா பிடிக்கும். 2028ஆம் ஆண்டுக்குள் மூன்றாவது இடத்துக்கு முன்னேறுவோம். நாம் அனைவரும் கடினமாக உழைத்தால், 2047ஆம் ஆண்டில் உலகில் பொருளாதார வல்லரசாக நாம் உயருவோம்.

தமிழகம், கேரளா, ஆந்திரம் உள்ளிட்ட உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள், 25 ஆண்டுகளுக்கு முன்பே குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தின. அதன் காரணமாக தற்போது தென்னிந்திய மாநிலங்களில் பிறப்பு சதவிகிதம் குறைந்துவிட்டது. ஆனால், உத்தரப்பிரதேசம், பிஹார் போன்ற மாநிலங்களில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. குழந்தை பிறப்பு சதவீதமும் அங்கே அதிகமாக உள்ளது. இந்த சூழலில் மக்கள் தொகையை நாம் கட்டுப்படுத்தியது நமக்கு ஒரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதேநேரத்தில் உத்தரப் பிரதேசம், பிஹார் மாநிலங்களுக்கு அது சாதகமாக அமைந்துள்ளது.
இந்த நாட்டுக்கு மிகப்பெரிய பங்களிப்பை நாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். மக்கள் தொகை மேலாண்மையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நாம் வெளிநாட்டுக்குச் செல்வதுபோல் வட மாநிலத்தினர் இங்கு வந்து குடியேற நேரிடும்" என்று சந்திரபாபு நாயுடு பேசினார்.

நாடாளுமன்ற தொகுதி மறுவரையறையால் மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் பாதிக்கப்படும் என்று தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களின் முதல்வர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அண்மையில் சென்னையில் நடைபெற்ற தொகுதி மறுவரையறை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில், குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்கு தொகுதி மறுவரையறை நடவடிக்கை தண்டனையாக அமைந்துவிடக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இந்தச் சூழலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திர மாநில முதல்வருமான சந்திரபாபு நாயுடு, இப்த விவகாரம் தொடர்பாகப் பேசியுள்ளார்.
இதையும் படிங்க: வெறுப்பு பற்றி நமக்கு பாடம் எடுக்கிறார் யோகி ஆதித்யநாத்.. இது அவல நகைச்சுவை.. மு.க.ஸ்டாலின் மரண கலாய்.!!
இதையும் படிங்க: திமுகவுக்கு 200 தொகுதியில் வெற்றியா.? அடுத்து பாஜக ஆட்சியில்... முக்கியமான அறிவிப்பை வெளியிட்ட அண்ணாமலை.!