சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜானகி, வேளச்சேரியை சேர்ந்த கிரிஜா ஆகிய இரண்டு பெண்களும் வேலூரில் இருந்து சென்னக்கு தனியாக பேருந்தில் பயணம் செய்துள்ளனர். அப்போது இனிப்புகளில் மயக்க மருந்து கலந்து கொடுத்து 8 சவரன் செயின் மற்றும் மோதிரங்கள் திருடப்பட்டதாக தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
இதே போல நசீமா என்ற பெண் கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரம் வந்த மாநகர பேருந்தில் பையில் வைத்திருந்த 13 சவரன் நகையை திருடப்பட்டதாக தாம்பரம் காவல் நிலையத்தில் உள்ள குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார்கள் தொடர்பாக தாம்பரம் போலீஸ் உதவி கமிஷனர் நெல்சன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணியன், சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். புகார் அளித்தவர்களிடம் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் புகைப்படத்தை காண்பித்த போது தங்கள் அருகில் அமர்ந்து பயணம் செய்த பெண் ஒருவரை அடையாளம் காட்டினர்.
இதையும் படிங்க: இந்த காலத்திலும் இப்படியா? வாரம் ரூ.200 சம்பளம்.. கொத்தடிமைகளாக சிக்கிய 48 பேர் மீட்பு..!

இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி நாமக்கல் மாவட்டம் சேர்ந்தமங்கலம் காளப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த ராணி (வயது 54) என்பவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட பொழுது கொள்ளை அடித்த நகைகளை தனது காதலனான பராமேஸ்வரன் (வயது 52) என்பவரிடம் கொடுத்து வைத்திருப்பதாக ராணி தெரிவித்தார். அது மட்டும் இன்றி தான் கொள்ளையடிக்கும் பேருந்துகளில் பாதுகாப்பாக தனக்கு பின்னால் இருந்து தன்னை கவனித்தவாரே பயணம் செய்வதும் அவர்தான் என தெரிவித்தார்.

உடனடியாக பரமேஸ்வரன் தொலைபேசி எண்ணை ஆய்வு செய்த பொழுது திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் பொழுது எப்படி ராணியின் பாதுகாவலர் போல் பின்னால் வருவாரோ அதே போன்று காவலர்கள் அழைத்து வருவது போதும் தாம்பரம் நோக்கி பின் தொடர்ந்து வந்தது தெரிந்தது. உடனடியாக தாம்பரம் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த பரமேஸ்வரனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தனர்.

15 ஆண்டுகளுக்கு முன்பு பழனியில் வைத்து ராணியை சந்தித்த பரமேஸ்வரன் அவருடன் லிவ்விங் டு கெதிராக வாழ்ந்து வந்தததும், பல்வேறு திருட்டுகளில் இவர்கள் இருவரும் ஈடுபட்டு வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இவர்களின் மீது ஏற்கனவே தாராபுரம், திருச்சுழி, பழனி, கரூர், திருச்சி கண்டோனாமென்ட் காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளது.
தமிழகம் முழுவதும் பேருந்து நிலையங்களில் வயதான பெண்கள் பயணம் செய்யும் பொழுது அவர்களுடன் அருகில் அமர்ந்து கோவில் பிரசாதம் என கூறி அல்வாவில் மயக்க மருந்து கலந்த இனிப்புகளை கொடுத்து அவர்கள் மயக்கம் அடைந்த பிறகு நாசுக்காக நகைகளை எடுத்துக்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

பேருந்துகளில் விற்கப்படும் வெள்ளரிக்காய், மாங்காய் போன்ற பொருட்களை வாங்கி கொடுப்பது போல கொடுத்து அதில் மிளகாய் பொடி தடவி இருக்கும் பகுதியில் மயக்க மருந்தையும் தடவி கொடுத்து அந்த பாணியிலும் நகைகளை பறித்துள்ளனர். இதேபோல கூட்டம் அதிகமாக உள்ள பேருந்துகளில் பெண்கள் நகைகளை பையில் வைத்திருந்தால் அதையும் நைசாக திருடி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்களிடமிருந்து தங்க நாணயம் உட்பட 10 சவரன் நகைகளை பறிமுதல் செய்த போலீசார் இருவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: அடுத்தடுத்து செயின் பறிப்பு.. என்கவுன்டரில் மாஸ் காட்டிய போலீஸ்.. காவல் ஆணையர் விளக்கம்..!