டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் கலந்து கொள்ள புறப்பட்டுச் சென்ற தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை காவல்துறை கைது செய்துள்ளது.
டாஸ்மாக் அலுவலகத்தில் கடந்த வாரம் சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறையினர், மதுபானம் கொள்முதல், விநியோகம், பணியிட மாறுதல் ஆகியவற்றில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடைபெற்று இருக்க வாய்ப்புள்ளதாக கூறியது. இதற்கான சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முயற்சியில் அமலாக்கத்துறை ஈடுபட்டுள்ளது.

இதனிடையே டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக கூறி அதன் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார். எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் திரண்டு அங்கிருந்து பேரணியாக எழும்பூரில் உள்ள தாளமுத்து நடராஜன் மாளிகையை நோக்கி சென்று டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடுவதாக திட்டம் வகுக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: தொடைநடுங்கி திமுக அரசு... அண்ணாமலை ஆவேசம்...!
இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக தனது இல்லத்தில் இருந்து புறப்பட்ட தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை காவல்துறையினர் அக்கறை பகுதியில் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “காவல்துறை ஏவல் துறையாக மாறிவிட்டது. இந்த ஆட்சியில் ஜனநாயகம் எப்படி இருக்கிறது என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கான பாஜகவின் போராட்டம் தொடர்ந்து நடக்கும். என்னை எத்தனை நாட்களுக்கு சிறையில் அடைத்து வைக்க முடியும்” என்றார்.

இதற்கு முன்னதாக, போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், சாலிகிராமத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் இருந்து புறப்பட முயன்றார். அங்கு ஏராளமான பாஜக தொண்டர்களும் குவிந்து இருந்தனர். அப்போது அங்கு வந்த போலீசார் தமிழிசை சௌந்தரராஜன் மட்டும் தனியாக செல்லலாம் என்றும் தொண்டர்கள் உடன் செல்லக்கூடாது என்றும் கூறினர். இதற்கு மறுப்புத் தெரிவித்து தமிழிசை போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கூடியிருந்த தொண்டர்களும் தமிழக அரசுக்கு எதிராகவும், காவல்துறைக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர். டாஸ்மாக் ஸ்டாலின் ஒழிக என்று அவர்கள் கோஷமிட்டனர்.

பிறகு தமிழிசை சௌந்தரராஜனை மட்டும் போலீசார் தங்கள் வாகனத்தில் ஏற்றினர். அப்போது வாகனத்தில் இருந்தபடி ஊடகத்தினரிடம் தமிழிசை பேசினார். எழும்பூருக்கு அழைத்துச் செல்வதாக போலீசார் கூறியுள்ளனர், ஒருவேளை அங்கு அழைத்து செல்லப்படாவிட்டால் அடுத்து என்ன என்று எனக்குத் தெரியவில்லை, டாஸ்மாக் ஊழலை வெளிக்கொண்டு வருவேன் என அவர் ஆவேசமாக குறிப்பிட்டார்.
இதேபோன்று பல்வேறு பகுதிகளிலும் பாஜகவின் முக்கிய நிர்வாகிகளை காவல்துறையினர் வீட்டுக்காவலில் அடைத்து வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காமாலை நோய் பிடித்த அண்ணாமலைக்கு கண்டதெல்லாம் மஞ்சள்… சேகர் பாபு பதிலடி..!