தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். முருகனின் ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடான இங்கு முருகன் கடலைப் பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிப்பார். இங்கு நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பக்தர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே திருச்செந்தூர் முருகன் கோயில் பெருந்திட்ட வளாக பணிகளுக்கான வரைபடம் தயாரிக்க ரூ.8 கோடி செலவிடப்பட்டுள்ளது என தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வந்தன.

இந்த நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் விளக்கம் அளித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாகம் அமைக்கும் பணிகள் 2 கட்டமாக நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்டமாக, ஹெச்.சி.எல் நிறுவனத்தின் (வாமசுந்தரி இன்வெஸ்ட்மன்ஸ் டெல்லி பி.லிட்) மூலம் ரூ.200 கோடி மதிப்பில் உபயமாக பணிகள் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை திருக்கல்யாணம் வைபோகம்..!

2-ம் கட்டமாக, கோவில் நிதி மூலம் ரூ.100 கோடி மதிப்பீல் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஹெச்.சி.எல். நிறுவனம் மூலம் நடைபெறும் முதற்கட்ட பணிகளுக்கு சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை மூலம் ரூ.171 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்தொகை முழுவதும் அந்த நிறுவனம் மூலம் நேரடியாக மேற்கொள்ளப்பட்டு, அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் செலவிடப்படும் தொகை ஆகும். அந்த தொகைக்கு அவர்களது பட்டய கணக்காயர்களால் தணிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது.

ஆனால் வரைபடம் தயாரிக்க ரூ.8 கோடி செலவிடப்பட்டுள்ளது என தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. மேற்படி அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிர்வாக அனுமதி தொகையானது, கோவில் நிதியிலிருந்தோ அல்லது அரசின் நிதியிலிருந்தோ வழங்கப்படவில்லை. பக்தர்களின் நலனுக்கான அடிப்படை வசதிகளை மேம்பாடு செய்வதற்காக உபயதாரர் பங்களிப்பு மூலம், அவர்களாலேயே நேரடியாக செலவு செய்யப்பட்டு அவர்களது நேரடி கண்காணிப்பில் சிறப்பாக பணிகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திருச்செந்தூரில் மாசித்திருவிழா கொடியேற்றம்... கடலென குவிந்த பக்தர்கள்