கிழக்குக் கடற்கரை சாலையில் (ஈசிஆர்) இரண்டு கார்களில் வந்த போதை இளைஞர்கள் பெண்கள் சென்ற காரை வழிமறித்ததும், துரத்தியதும் பேசுபொருளானது. இந்தக் காரில் திமுகவின் கொடி கட்டப்பட்டிருந்ததால், இச்சம்பவத்தில் திமுகவினர் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகள் திமுக அரசை விமர்சித்தன. இந்த வழக்கில் தொடர்புடைய 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் போலீசார் விசாரணையில், முக்கியமாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்துரு என்பவர் அளித்த வாக்குமூலம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "
கிழக்கு கடற்கரை சாலையில் பெண்களை துரத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்துரு என்ற குற்றம் சாட்டப்பட்ட நபரின் ஒப்புதல் வாக்குமூலத்தை ஊடகங்களில் வெளியிட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. குற்றம் சாட்டப்பட்ட நபரின் ஒப்புதல் வாக்குமூலத்தை வெளிப்படையாக ஊடகங்களில் வெளியிடுவது தவறு என்பதும், விசாரணைக்கு முரணானது என்பதும் காவல் துறைக்கு தெரியாதா? இனி எல்லா வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் வாக்குமூலத்தை இதே போன்று வெளியிடுமா தமிழக காவல்துறை?
இதையும் படிங்க: 'கட்சி கொடி கட்டியதாலேயே திமுக என ஆகிவிடாது..!' முட்டுக் கொடுக்கும் திருமா..!
இது அண்ணா பல்கலைக்கழக 'அக்யூஸ்ட்' ஞானசேகரனுக்கும் பொருந்துமா? அந்தக் கொடூரன் புரிந்த குற்றச்செயல் குறித்த வாக்குமூலத்தையும் வெளியிடுமா காவல் துறை? 2 ஜி வழக்கில் 28/01/11 மற்றும் 21/02/11 அன்று சாதிக் பாட்சா அளித்த வாக்குமூலத்தை விசாரணை அமைப்பு அன்றே ஊடகங்களில் வெளியிட்டிருந்தால் அன்றைய, இன்றைய ஆட்சியாளர்களின் மிக முக்கிய புள்ளிகளின் நிலை என்னவாகியிருக்கும் என்று சொல்ல முடியுமா? என்ன நடக்கிறது தமிழகத்தில்? நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டிய ஒப்புதல் வாக்குமூலத்தை காவல்துறையே ஊடகங்களுக்கு அளித்து விட்டு வழக்கை திசை திருப்புவது அராஜகத்தின் உச்சக்கட்டம்.
ஃபாஸிஸ அரசின் அடக்குமுறை.

பின்னர் நீதிமன்றங்கள் எதற்கு? நீதிபதிகள் எதற்கு? ஆளும் கட்சியின் கொடி வாகனத்தில் இருந்தது என்பதற்காக குற்றம் சாட்டப்பட்ட (Accused) நபரின் வாக்குமூலத்தை வெளியிடுவது அதிகார துஷ்பிரயோகம் தானே? காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலம் நீதிமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்படாது என்பது தொடர்புடைய காவல்துறை அதிகாரிக்கு தெரியாதா? தெரிந்தே செய்திருந்தால், ஆளும் கட்சிக்கு ஆதரவாக அப்பட்டமாக காவல் துறை செயல்படுகிறது என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் தேவையில்லை" நாராயணன் திருப்பதி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: காரில் பெண்களை விரட்டிய சம்பவம்; முக்கிய புள்ளிகளைத் தட்டித்தூக்கிய போலீஸ்!