தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்த மாதம் 14-ந்தேதி கூட உள்ளது. அன்றைய தினம் 2025-26ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. மார்ச் 15-ல் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்தும், பட்ஜெட் கூட்டத்தொடரை எவ்வாறு நடத்துவது என்பதும் குறித்து ஆலோசிக்க வருகிற 25-ந் தேதி அமைச்சரவை கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் நண்பகல் 12 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

முன்னதாக பல்வேறு துறைகளுடன் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தொடர்ச்சியாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார். ஒவ்வொரு துறைக்கும் கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை, அவை செலவிடப்பட்ட விவரம், இப்போதைய எதிர்பார்ப்புகள், தேர்தல் வாக்குறுதியில் நிறைவேற்றப்பட்ட வேண்டியவை எவை, அதற்கான நிதி ஒதுக்கீடு, இவை அனைத்திற்கும் மேலாக பொதுமக்களை கவரும் வகையிலான கவர்ச்சிகரமான திட்டங்கள் ஆகியவை குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: அண்ணனை தீர்த்துக்கட்ட முடிவு செய்த தம்பி.. வண்டி ஏற்றி கொலை செய்ய முயற்சி.. விபத்து நாடகமாடிய இருவர் கைது!

சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு, ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், இந்து சமய அறநிலையத்துறை,சுற்றுச்சூழல், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் ஆகிய துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள் அதிகாரிகள் மற்றும் அந்த துறைகளைச் சேர்ந்தவர்களுடன் தங்கம் தென்னரசு இன்றைய தினம் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டங்களின் முடிவில் எடுக்கப்படும் முடிவுகள் வருகிற 25-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி செய்யப்படும். அவை அடுத்த மாத பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அறிவிப்புகளாக வெளியாகும்.
இதையும் படிங்க: மத்திய அமைச்சர் எல்.முருகன் தடுத்துநிறுத்தப்பட்ட விவகாரம்.. தமிழக டிஜிபிக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம்..