தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் நேரில் சந்திக்க அனுமதி கேட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்ப உள்ளாராம். ஏப்ரல் முதல் வாரத்தில் பிரதமர் வெளிநாடு செல்ல உள்ள நிலையில், அதற்கு முன்னதாக சந்திக்க வேண்டி முதலமைச்சர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறாராம்.

தொகுதி மறுசீரமைப்பு... தமிழ்நாடு முதலமைச்சர் முன்னெடுத்துள்ள இந்த விவகாரம் தான் இன்றைய தேதிக்கு இந்தியாவின் மிக முக்கியமான பேசுபொருள். அதாவது தற்போதுள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 543. அதாவது 1971-ம் ஆண்டின் மக்கள்தொகை அடிப்படையில் இந்த எண்ணிக்கை நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்பிறகு 50 ஆண்டுகள் கடந்துவிட்டது, மக்கள்தொகையும் 55 கோடியில் இருந்து 140 கோடியாக உயர்ந்து விட்டது. ஆனால் தொகுதிகளின் எண்ணிக்கை மட்டும் உயர்ந்தபாடில்லை.
இதையும் படிங்க: மோடி செலவைதான் பார்ப்பீங்க.. 4 ஆண்டுகளில் தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணச் செலவு தெரியுமா..?
அதேபோன்று 82-வது அரசியல் சட்டத்திருத்தத்தின்படி 2026-ம் ஆண்டு வரை தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றக்கூடாது என்பது அமல்படுத்தப்பட்டது. அப்படிப்பார்த்தால், அடுத்த ஆண்டு தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும். ஆனால் மக்கள்தொகையின் அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால் மக்கள்தொகையை வெகுவாக கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் தங்களின் தொகுதிகளின் எண்ணிக்கையை இழக்கக்கூடும். அதேசமயம், உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் தொகுதிகள் அதிகரிக்கவும் செய்யும்.

இது மக்கள்தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்பது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைக்கும் குற்றச்சாட்டு. இதற்காக கடந்த 5-ந் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டிய முதலமைச்சர் தென்மாநில அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கைக் குழு ஒன்றை உருவாக்குவதே தீர்வு என்று அறிவித்தார். அதன்படி உருவாக்கப்பட்ட கூட்டு நடவடிக்கைக் குழுவின் முதலாவது கூட்டம் கடந்த 22-ந் தேதி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அதில் மேலும் 30 ஆண்டுகளுக்கு தொகுதி மறுவரையறை செய்வதை நீட்டிக்க வேண்டும் என்றும் இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து முறையிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுத உள்ளார். இன்னும் 10 நாட்களுக்குள் சந்திப்பை நடத்த முதலமைச்சர் விரைவு காட்டி வருகிறார். ஏனெனில் ஏப்ரல் முதல் வாரத்தில் பிரதமர் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால் அதற்கு முன்னதாகவே இந்த சந்திப்பை மேற்கொள்ள முதலமைச்சர் விரும்புகிறார்.
இதையும் படிங்க: கிறுக்கு வேலைகளில் ஈடுபடும் முதலமைச்சர் நிதிஷ்..! மண்டையைப் பிய்த்துக் கொள்ளும் அதிகாரிகள்..!