தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா தொடங்கி நடைபெறக்கூடிய நிலையில், அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தொண்டர்கள் 3 மணி நேரமாக பசியுடன் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2500 நபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் போதிய ஏற்பாடுகள் சரியாக செய்யப்படவில்லை எனவும், அவர்களுக்கு காலை உணவு சரியான முறையில் வழங்கப்படவில்லை எனவும் தொண்டர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தினுடைய இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி மாமல்லபுரம் அருகில் இருக்கக்கூடிய தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது. சுமார் 3000 பேர் இந்த நிகழ்ச்சியிலே பங்கேற்று இருக்கிறார்கள். நிகழ்ச்சி 10 மணிக்கு தொடங்க இருந்தாலும் தொண்டர்கள் அதிகாலை 5 மணியில் இருந்தே வரிசை கட்டி நிற்கத் தொடங்கியுள்ளனர். சுமார் 6.30 மணி அளவில் பவுன்சர்கள் தொண்டர்களுடைய பாஸ்களை சரி பார்த்து உள்ளே அனுமதித்துள்ளனர்.
இதையும் படிங்க: Get Out கையெழுத்து இயக்கம்... முதல் கையெழுத்து போட்டு தொடங்கி வைத்தார் விஜய்...!

ஏறக்குறைய நான்கு மணி நேரத்திற்கும் மேலாக கடும் பசியோடு அவர்கள் உள்ளே காத்திருக்கின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்ற தொண்டர்களுக்கு மதிய உணவு மட்டும்தான் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. காலை உணவு பொறுத்தவரையிலே ஒரு சிறிய ஜூஸ் வாட்டர் பாட்டில் ஒன்றும் ஒரு ஐந்து பிஸ்கட்டுகள் கொண்ட ஒரு சிறிய பிஸ்கட் பாக்கெட் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர அவர்களுக்கு உணவு எதுவும் கொடுக்கப்படவில்லை. காலையில இட்லி உப்புமா போன்ற எந்த ஒரு காலை உணவும் வழங்கப்படவில்லை. இளைஞர்கள் மட்டுமில்லாமல் பல வயதானவர்களும் கூட வந்திருக்கிற நிலையில், காலை உணவு ஏற்பாடு செய்யப்படாமல் இருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் பெண்கள் வந்திருக்கிறார்கள், சிலர் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள் அவர்களுக்கு எந்தவிதமான உணவும் ஏற்பாடு செய்யப்படவில்லை. இளைஞர்கள் விஜயை பார்க்கப் போகிறோம் என்ற ஒரு ஆர்வத்தில் இருந்தாலும், பெரியவர்கள் அதே நேரத்தில் ஒரு 40 வயதை கடந்தவர்கள் எல்லாம் லேசான தலை சுற்றலோடும் மயக்க நிலையிலும் தொடர்ந்து சோர்வுடன் அமர்ந்திருக்கிறார்கள்.

காலை உணவு ஏற்பாடு செய்திருப்பார்கள் என்பதால், அதிகாலை முதலே காத்திருந்ததாகவும், ஆனால் ஒரு பிஸ்கட் பாக்கெட் மற்றும் ஒரு சிறிய பாட்டிலில் ஜூஸ் மட்டுமே கொடுத்ததாகவும் நிகழ்ச்சியில் பங்கேற்ற தொண்டர்கள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும் சிலர் வெளியே போய் சாப்பிட்டு வரலாம் என்றால், பக்கத்துல வந்து உணவுக்கான எந்த ஒரு ஏற்பாடுமே கிடையாது. மதிய உணவு மட்டும்தான் தற்போது சுட சுட தயாராகி வருகிறது. அருகில் கடைகளோ அல்லது காசு கொடுத்து வாங்குவதற்கான வாய்ப்புகளோ கூட இல்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.

தவெக நிகழ்ச்சி நடைபெறும் நட்சத்திர விடுதியில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வெளியில் சென்றால் மட்டும்தான் உணவு கடைகள் இருக்கிறது. ஒரு கிலோமீட்டர் தூரம் வெளியில் சென்று சென்றுவிட்டால் மீண்டும் உள்ளே அனுமதிக்கமாட்டார்கள் என்ற எண்ணத்தால், தொண்டர்கள் பசியுடனே 3 மணி நேரமாக அமர்ந்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க: தவெக விழாவில் கைக்குழந்தைகளுடன் பெண்கள் தவிப்பு... நிர்வாகிகள் அதிருப்தி..!