ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாகப் பேசிய அமெரிக்க பல்கலைக்கழகத்தின் பயிலும் இந்திய ஆராய்ச்சி மாணவரை அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்ப அந்நாட்டு நீதிமன்றம் அரசுக்கு தடை விதித்துள்ளது.
வாஷிங்டனின் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக இருக்கும் இந்தியாவைச் சேர்ந்த பாதர் கான் சூரி ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவித்தார் என்ற குற்றச்சாட்டில் அமெரிக்க போலீஸார் அவரைக் கைது செய்தனர்.
அதிபர் ட்ரம்ப் 2வது முறையாகஆட்சிக்கு வந்ததில் இருந்து தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக பேசும் வெளிநாட்டினரை அவர்களின் நாட்டுக்கே திருப்பி அனுப்பிவைத்து வருகிறார். ஏற்கெனவே இந்திய மாணவி ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கவே அவர் தானாகவே அமெரிக்காவை விட்டு வெளியேறினார்.
இதையும் படிங்க: #மேஜிக்கல் HANDS..! எம்.எப். ஹுசைன் ஓவியம் 119 கோடிக்கு ஏலம்..!

அமெரிக் அரசு தன்னை நாடு கடத்தும் முடிவை எதிர்த்து சூரி தரப்பில் விர்ஜினியா நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி பாட்ரிகா டோலிவர் கில்ஸ் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சூரியின் வழக்கறிஞர் வாதிடுகையில் “பாதர் கான் சூரியை அமெரிக்க போலீஸார் கைது செய்துள்ளதை ரத்து செய்ய வேண்டும். சூரிக்கு எதிரான கைது என்பது, பழிவாங்கும் நடவடிக்கையாக அடைத்துவைக்கப்பட்டுள்ளார். அவரின் கருத்து சுதந்திரத்தை பறித்து, கட்டுப்படுத்தும் வகையில் அரசு செயல்படுகிறது. பாலஸ்தீனிய உரிமைக்கு ஆதரவாக இருப்போர் அனைவரும் இதுபோல் மிரட்டப்படுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, நீதிபதி பாட்ரிகா டோலிவர் பிறப்பித்த உத்தரவில் “இந்த நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை சூரியை அமெரிக்காவில் இருந்து அவரின் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப அரசு முயற்சிக்கக்கூடாது” என உத்தரவிட்டார்.

மேலும், அமெரிக்க சிவில் சுதந்திர கூட்டணியும், சூரி லூசியானாவில் உள்ள குடியேற்ற தடுப்புக்காவல் மையத்தில் அடைத்து வைக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில் “ டாக்டர் கான் சூரி இந்தியாவைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் பயில அவருக்கு விசா வழங்கப்பட்டு, ஈராக், ஆப்கானிஸ்தான் அமைதி குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்.
அவர் எந்த சட்டவிரோத நடவடிக்கையிலும் ஈடுபட்டதாக எங்களுக்குத் தெரியவில்லை, கைது செய்யப்பட்டதற்கான காரணத்தையும் போலீஸார் எங்களிடம் தெரிவிக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளது.
அமெரிக்க உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் டிரிசியா மெக்லாலின் கூறுகையில் “வெளிநாட்டு மாணவரான சூரி ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக்கத்தில் படித்துக்கொண்டே ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். சமூக வலைத்தளத்தில் யூதர்களுக்கு எதிராக பிரசாரம் செய்தார். ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் மூத்த ஆலோசனையாளர்களுடன் இவருக்கு தொடர்பிருக்கிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: புளோரிடாவில் பற்றி எரியும் காட்டுத்தீ..! செய்வதறியாது தவிக்கும் மக்கள்..!