ஊட்டியில் ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்பார்களா, இல்லையா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தில் தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வந்தது. இந்நிலையில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநருக்கு பதிலாக மாநில அரசுக்கு வழங்குவது உட்பட 10 சட்ட மசோதாக்களை சட்டப்பேரவையில் இருமுறை நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால், அவர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் நிலுவையில் உள்ள 10 மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றமே சிறப்பு அதிகாரத்தின் மூலம் ஒப்புதல் அளித்து உத்தரவிட்டது.

இதன்மூலம் தமிழக அரசின் 10 சட்டங்களும் அரசிதழில் வெளியிடப்பட்டன. இதனையடுத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பதிவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஏப்.16இல் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதற்கிடையே பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநர் ஆர்.என்.ரவி ஆண்டுதோறும் துணைவேந்தர்கள் பங்கேற்கும் கூட்டத்தை நடத்துவார். ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் எதிரொலியாக முதல் முறையாக முதல்வர் ஸ்டாலின், துணைவேந்தர்கள், பதிவாளர்களுடன் ஆலோசனை நடத்தியது உயர்கல்வி வட்டாரத்தில் பரபரப்பானது.

.
இந்நிலையில், ஊட்டியில் ஏப். 25, 26 ஆகிய தேதிகளில் துணைவேந்தர்களின் ஆலோசனைக் கூட்டத்தை ஆளுநர் ஆர்.என். ரவி கூட்ட இருப்பதும், அதில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இதுதொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகை தரப்பில் எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. பல்கலைக்கழக வேந்தரின் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் குறைத்த நிலையில், ஏற்கெனவே துணைவேந்தர்கள் கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நடத்தியதாலும் இந்த விவகாரம் பரபரப்பாகியுள்ளது.
இதையும் படிங்க: ஆளுநரின் அடாவடி.. துணைவேந்தர் மாநாட்டை தடுத்து நிறுத்துங்கள்.. முதல்வருக்கு திருமா அழுத்தம்!!

மேலும் தமிழ்நாடு பல்கலைக்கழக திருத்தங்கள் சட்ட மசோதாக்கள் உச்ச நீதிமன்ற சிறப்பு அதிகாரம் காரணமாக சட்டமாகி நடைமுறைக்கு வந்துள்ளன. ஆனால், பல்கலைக்கழகங்களின் வேந்தராக (தமிழ்நாடு இசை பல்கலைக்கழகம் நீங்கலாக) ஆளுநரே இருந்து வருகிறார். வேந்தர் என்ற முறையில் பல்கலைக்கழக நிர்வாகத்தை அவர் ஆய்வு செய்ய அவருக்கு அதிகாரம் இருக்கிறது. இருப்பினும் உச்ச நீதிமன்ற உத்தரவால் அனைத்து பல்கலைக்கழக நிர்வாகங்களின் அதிகாரமும் தமிழக அரசு வசம் வந்துவிட்டதாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் ஆளுநர் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் துணைவேந்தர்கள் பங்கேற்பார்களா, இல்லையா என்ற கேள்வி உயர்கல்வித் துறை வட்டாரத்தில் எழுந்துள்ளது.

இந்தக் கூட்டத்தை ஆளுநர் கூட்டுவதற்கு திமுக கூட்டணியில் உள்ள திக, விசிக, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று துணைவேந்தர்களுக்கு உத்தரவிடுங்கள், கூட்டத்தை தடுத்து நிறுத்துங்கள் என்று தமிழக அரசுக்கு இக்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. எனவே, இதில் முதல்வர் ஸ்டாலின் என்ன முடிவு எடுப்பார் என்கிற கேள்வியும் எழுகிறது. எனவே, அடுத்தடுத்த நாட்களில் என்ன நிகழும் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: மாநாட்டுக்கு போகக் கூடாது.. துணைவேந்தர்களுக்கு உத்தரவு போடுங்க முதல்வரே.. ஒரே குரலில் திமுக கூட்டணி கட்சிகள்!