''Work From Home முறையில் சிலர் கட்சி நடத்துகின்றனர். தேர்தல் முடிவு இறுதியில் அவர்கள் Home-ல்தான் இருப்பார்கள்'' என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விஜயை விமர்சித்துள்ளார்
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ''இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழக முதலமைச்சர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மக்கள் மத்தியில் எவ்வளவு பெரிய ஆணவ அரசாக இருந்தாலும் வெற்றி பெற முடியாது. நாடாளுமன்ற தொகுதிகள் குறைப்பு விவகாரத்தில் முதல்வர் புயல் வருவதற்கு முன்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

மத்திய அரசு பல விவகாரங்களில் கொடுத்த வாக்குறுதிகளை அப்படியே நிறைவேற்றவில்லை. அமித்ஷா கூறியது போல நாடாளுமன்ற தொகுதிகள் குறைக்கவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். நாடாளுமன்ற தொகுதிகள் குறைப்பு விவகாரத்தில் முதல்வர் போர் இல்லாமலும், போர் சங்கு ஊதிய உடனும் வெற்றி கண்டுள்ளார்.
இதையும் படிங்க: கி.வீரமணியை கண்டிக்கும் விசிக...பெரியாரை விமர்சிக்கும் சீமானை கண்டிக்காமல், வேங்கை வயல் விவகாரத்தில் அரசை ஆதரிப்பதா? என கேள்வி
தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுதும் இந்தி மொழிக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. கர்நாடகா மாநிலத்தில் இந்தி மொழிக்கு எதிரான போராட்டங்களை தொடங்கி விட்டனர். கர்நாடகா மாநிலத்தில் தொடர்ந்து மேற்கு வங்காளம், பஞ்சாப், கேரளா ஆகிய மாநிலங்களில் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் நடைபெறுகிறது. இந்தி திணிப்பு காரணமாக ராஜஸ்தானில் உருது மொழி எடுக்கப்பட்டு இந்தி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஒப்பனை செய்பவர்களுக்கு ஊடகங்கள் தான் முக்கியத்துவம் கொடுக்கிறது. அரசியல் அனுபவம் வாய்ந்தவர்கள் முக்கியத்துவம் தருவதில்லை. Working from Home எனும் தனி நபருக்காக நடைமுறையில் இருந்தது. சில அரசியல் கட்சித் தலைவர்கள் Working From Home எனும் முறையில் தனது கட்சியை நடத்தி வருகிறார்கள். அவர்கள் கடைசி வரை வீட்டிலேயேதான் இருக்க வேண்டும்.
இளைஞர்கள் ரசிகர் மன்றத்தினரை வைத்து நேரடியாக ஆட்சியைப் பிடிக்க முடியாது. மக்கள் மன்றத்தில் இடம் பிடித்தால் மட்டுமே ஆட்சியைப் பிடிக்க முடியும். பாசிசமா? பாயாசமா? என முதலில் கூறினார். தற்போது பாசிசம் பேசி வருகிறார். இனி வருங்காலத்தில் பாயாசமா? கொழுக்கட்டையா? என தெரியவரும். விஜய்யை விட செல்வாக்கு உள்ளவர்கள் அரசியலுக்கு வந்து காலூன்ற முடியவில்லை. 2026 தேர்தல் அனைத்து விதமான கருத்துக்களுக்கும் பதில் அளிக்கும்.

திமுக 200 தொகுதிகளுடன் நிறுத்திக் கொள்ளக் கூடாது. இன்னும் அதிக அளவில் தொகுதிகளை வெல்ல வேண்டும். திமுக கொள்கை கூட்டணியாக இருப்பதாலும், தமிழ்நாடு பெரியார் மண்ணாக இருப்பதாலும் 2026-ல் திமுக ஆட்சி அமைக்கும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: விஜய் சொன்ன 1967, 1977 ரிப்பீட்டு ஆகுமா.? அன்று அண்ணாவும் எம்.ஜி.ஆரும் எப்படி சாதித்தனர்.?