குற்றவாளியை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆளுங்கட்சி கூறுகிறது, இல்லை அதில் மேலும் பல மர்மங்கள் புதைந்துள்ளன, உடந்தையாக இருந்தவர்கள் யார்?யார்? என்ற உண்மைகளை வெளிக்கொணர வேண்டுமென எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.
அதிமுக , பாஜக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் களத்தில் இறங்கி போராடுகின்றன. சட்டப் போராட்டங்களை முன்னெடுக்கின்றன. ஆளுநரை சந்தித்து முறையிடுகின்றன. நெல்லிக்காய் மூட்டையென சிதறி இருந்த எதிர்க்கட்சிகள், அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் தெரிந்தோ தெரியாமலோ ஒன்றிணைந்து போராடுகின்றன.
மறுபுறம் இதுவரை அமைதி காத்து வந்த கூட்டணிக் கட்சிகள் கூட தங்கள் முணுமுணுப்பை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளன. யார் அந்த சார்? என்று அதிமுக, பாஜக எழுப்பிய கேள்வியை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் இப்போது எழுப்பி உள்ளார். பலரின் சந்தேகங்களுக்கு விடையாக காவல்துறையின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என சூசகமாக அவர் பேசி உள்ளார்.

இந்த சூழ்நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் உரிய விசாரணைக் கோரி, பாமக மகளிரணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து பாமக வழக்கறிஞர் அணி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. நீதிபதி வேல்முருகன் முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
இதையும் படிங்க: 1000 ரூபாய் யாருக்கு வேணும்..பொண்ணுங்களுக்கு பாதுகாப்பு தான் வேணும்..போராட்டக்களத்தில் கர்ஜித்த சௌமியா அன்புமணி ..!
அப்போது இவ்வழக்கு தொடர்பாக பல்வேறு கருத்துகளை அவர் முன்வைத்தார். பெண்கள் பாதுகாப்பில் உண்மையான கவனம் செலுத்தாமல் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்குவது ஏன்?.. போராட்டம் நடத்தும் ஒவவொருவரும் முதலில் தங்கள் மனதில் கை வைத்து கூறுங்கள் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படும் என்று...ஒரு சம்பவம் நடந்ததற்கு அனைவரும் வெட்க பட வேண்டும் அதற்கு மாறாக இந்த விவகாரத்தை அனைவரும் அரிசியலாக்கி வருகிறார்கள் என்று கண்டித்துள்ளார்.

கூடவே இந்த விவகாரத்தை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளதாகவும், காவல்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், போராட்டம் நடத்துவது ஏற்புடையது அல்ல,
வெறும் விளம்பரத்திற்காக இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளீர்கள் என்று சுளீர் கேள்விகளை எழுப்பி உள்ளார்.
இதனிடையே சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி உள்ளிட்ட ஏராளமானோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச் செயல்களை பட்டியலிட்டுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 11.11 சதவிதம் அதிகரித்துள்ளதாகவும், ஒட்டுமொத்தமாக பெண்களுக்கு எதிரான குற்றஞ்சசெயல்கள் 8 சதவிதம் அதிகரித்துள்ளதாகவும் தேசிய குற்ற விவர ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்களை சுட்டிக்காட்டி உள்ளார் அன்புமணி ராமதாஸ்.
அதிகப்படியான மதுக்கடைகளை திறந்து நடத்துவம், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை தடுத்து நிறுத்தத் தவறியதும் தான் இத்தகைய குற்றங்களுக்கு காரணம் என்பதால் இதற்கான முழுப்பொறுப்பை தமிழக அரசே ஏற்க வேண்டும் என்பதும் அவரது வாதம்..
இதையும் படிங்க: பெண்களுக்கு 1000 ரூபாய் வேண்டாம்; பாதுகாப்பு தான் வேண்டும்... சௌமியா அன்புமணி ஆவேசம்