கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுத் துறைகளில் பல்வேறு மாற்றங்களை பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்துள்ளார். இந்தியா வல்லரசாக வேண்டும் என்று பிரதமர் விரும்புகிறார். அதற்காக மாறி வரக்கூடிய உலக சூழ்நிலைகளுக்கு ஏற்ப கல்வி திட்டம் முதல் அரசினுடைய பல்வேறு கொள்கை முடிவுகளில் பெரிய மாற்றத்தை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் தேசியக் கல்விக் கொள்கை மூலம் நாட்டில் உள்ள மாணவ, மாணவர்கள் அனைவரும் ஒரே கருத்தோடு கல்வி பயில வேண்டும் எனப் பிரதமர் நினைக்கிறார். தனியார் பள்ளிகளில் வசதியுள்ள பெற்றோர் தங்களுடைய குழந்தைகளுக்குப் பல்வேறு மொழிகளைக் கற்றுக் கொடுத்து வருகின்றனர். அரசு பள்ளி மாணவ, மாணவிகளும் பயன்பெற வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. ஆனால், திமுக அரசு மக்களைத் திசை திருப்ப முயற்சிக்கிறது. தேசிய கல்வி கொள்கையில் இந்தி கட்டாயம் அல்ல. இந்தி திணிக்கப்படவும் இல்லை.
தற்போது தொகுதி மறுவரையறை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் என்கிற பெயரில் ஒரு நாடகம் நடத்துவதற்கு மாநிலத்தின் முதல்வர் தயாராகி வருகிறார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு போன்றவற்றை மடைமாற்றம் செய்யவே இந்த முயற்சியை முதல்வர் மேற்கொள்கிறார். ஆனால் உண்மை நிலை மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கோவையில் நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது தொகுதி மறுவரையறையால் தமிழகத்துக்குப் பாதிப்பு ஏற்படாது என உறுதியளித்த பின்னரும் முதல்வர் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துகிறார். அனைவரும் அவரது பின்னால் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த தமிழக முதல்வர் முயற்சி செய்கிறார். திமுகவின் பாரம்பரியமே தனிப்பட்ட முறையில் தரம் தாழ்ந்து பேசுவதுதான். இந்திய ஆட்சி பணியில் பெயர் பெற்றவர் அண்ணாமலை. ஒரு தேசியக் கட்சியின் மாநில தலைவரை தரம் தாழ்ந்து திமுகவினர் விமர்சிக்கின்றனர் என்றால், அவர்களின் தரம் அவ்வளவுதான்" என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சொந்த ஊரில் விலை போகாத ஆடு ! அமைச்சர் செந்தில் பாலாஜி கலாய்.
இதையும் படிங்க: பாஜகவின் 'மிஷன் சவுத்...' புதிய தேசியத் தலைவராகிறார் வானதி சீனிவாசன்..?