தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பல்வேறு நிறுவனங்களை மிரட்டி பணம் பறிப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஹெ.ராஜா டெல்லி தலைமைக்கு கடிதம் எழுதியதாக கடிதம் ஒன்று வைரலாகி வருகிறது. பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கு ஹெச்.ராஜா, எழுதியதாகக் கூறப்படும் அந்தக் கடிதத்தில், “பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை எனக்கு வழங்கியதற்கு நன்றி. இது ஒரு பெரிய கவுரவம். தமிழ்நாட்டில் பாஜகவின் மதிப்பு, தொலை நோக்குப் பார்வையை நிலைநிறுத்துவதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
எனது பதவிக் காலத்தில், தலைவர்கள், தொண்டர்கள், அனுதாபிகளுடன் மாநிலம் முழுவதும் பல இடங்களுக்கு பயணம் செய்வேன்.பாஜகவின் அடித்தளத்தை வலுப்படுத்தவும், கட்சியின் தளத்தை விரிவுபடுத்தவும் நான் விடாமுயற்சியுடன் உழைப்பேன். எனது தொடர்புகளில் நம்பகமான ஆதாரங்களால் பகிரப்பட்ட சில தகவல்களை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டும் என நினைக்கிறேன்.

கேஜி குழுமம், நாயுடு சமூகத் தலைவர்கள், பண்ணாரி குழுமத்தைச் சேர்ந்த ஸ்ரீ எஸ்.வி.பாலசுப்ரமணியம் போன்ற தனிநபர்கள், குமரகுரு கல்லூரிகள் போன்ற நிறுவனங்களிடமிருந்து பணம் பறிப்பதில் தற்போதைய தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதில் ஸ்ரீ ரவி சாம், ஸ்ரீ கே.ஜி.அனுஷ் போன்ற இடைத்தரகர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணங்களுக்காகவும், திண்டுக்கல் ஸ்ரீ அண்ணாமலையார் சேம்பர்ஸில் முதலீடுகளுக்காகவும் நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அது எடப்பாடியாரின் கடிதமா..? பாலியல் ரீதியாக அட்டாக் செய்யப்படும் காயத்ரி ரகுராம்..! விடாமல் துரத்தும் பாஜக வார் ரூம்..!
இதில் நம் கட்சி தலைவரின் தலைமையின் குடும்ப உறுப்பினர்கள் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால், கட்சியின் நற்பெயருக்குக் கேடு விளைவித்து, மக்களின் நம்பிக்கையை சிதைத்துவிடும். இந்த விவகாரத்தை முழுமையாக விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மீண்டும், தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி, வெற்றிக்காக அயராது உழைக்க அர்ப்பணிப்புடன் பணியாற்றும் வாய்ப்புக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தக் கடிதம் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. இதனால் பதறிப்போன தனது எக்ஸ் தள பக்கத்தில், “என் பெயருக்கு களங்கம் வரவைக்கும் வகையில், சமூக விரோதிகளால் தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இந்த போலி தகவலை தயார் செய்து பரப்பிய நபர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பொய்யான தகவலை யார் பரப்பினாலும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்” என பதிவிட்டு இருந்தார்.

அதன்படி, அண்ணாமலைக்கு எதிராக ஹெச்.ராஜா எழுதியது போல் போலி கடிதம் வெளியான விவகாரம் குறித்து விசாரிக்குமாறு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக புகார் அளித்துள்ளது. இதுகுறித்து பேசிய பாஜக ஐடிவிங் தலைவர் கார்த்திக் கோபிநாத், ஜல்லிக்கட்டு சாதி பாகுபாடு, பொங்கல் பரிசுத் தொகுப்பு போன்ற பிரச்னைகளை திசை திருப்ப அண்ணாமலை குறித்து அவதூறு பரப்புகிறார்கள் எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில் இந்தப் போலிக் கடித்தத்தை தயாரித்து பொதுவெளியில் பரப்பியதாக தமிழக காங்கிரஸ் பெண் நிர்வாகி திவ்யா சிக்கியுள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஹெச்.ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: “இப்ப என்ன செய்யுறது?” விழிபிதுங்கி நிற்கும் பாஜக, அதிமுக - விளாசிய மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்!