"ஆளுநர் ரவியே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு" என்ற கோஷத்துடன் இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தை திமுக முன்னெடுத்திருக்கிறது.

சட்டப்பேரவையில் நடந்தது என்ன?
தமிழக சட்டப்பேரவையின் 2025ம் ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முறையான மரியாதையுடன் சட்டப்பேரவைக்குள் ஆளுநர் ஆர்.என்.ரவி அழைத்து வரப்பட்டார். அவை நடவடிக்கைகளை தொடங்கும் முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை படிக்க முயன்ற போது, அதிமுகவினர் யார் இந்த சார்? பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மற்றொருபுறம் ஆளுநர் உட்கார்ந்திருந்த சபாநாயகர் இருக்கைக்கு முன் வேல்முருகன் உடன் கூடிய காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆளுநருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நீடித்தது. இதனைக் தடுப்பதற்காக தேசிய கீதம் இசைக்க வேண்டும் என ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். ஆனால் அவையில் தேசிய கீதம் ஒலிக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த ஆர்.என்.ரவி, ஆளுநர் உரையைக் கூட வாசிக்காமல் சட்டப்பேரவையை விட்டு வேக, வேகமாக வெளியேறினார்.
இதையும் படிங்க: சமூகநீதியில் விளம்பர மாடல் அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை ...அறிக்கையில் புயலை கிளப்பிய ராம்தாஸ்

ஆளுநருக்கு எதிராக பொங்கிய திமுக:
ஆளுநரின் இந்த செயல் தமிழக சட்டப்பேரவையின் மரபு மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமானப்படுத்துவது என திமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டித்தன. இதனிடையே, தமிழ்நாட்டில் அத்துமீறும் ஆளுநரையும் , அவரைக் காப்பாற்றும் அதிமுக - பாஜக கள்ளக் கூட்டணியையும் கண்டித்து இன்று காலை மாவட்ட தலை நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக திமுக தலைமை அறிவித்திருந்தது. அதன்படி இன்று தமிழகம் முழுவதும் ஆளுநருக்கு எதிராக திமுக சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

சென்னையில் ஆர்.எஸ்.பாரதி:
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தி.மு.க எம்.பிக்கள் கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். பாஜக அல்லாத மாநிலங்களில் தனி ராஜாங்கம் நடத்த ஆளுநர்கள் முயற்சிப்பதாக குற்றச்சாட்டியுள்ள திமுக, மாநில அரசை மதிக்காத ஆளுநரை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. மாநில உரிமையை சிதைத்து, சுயாட்சியை பறிக்கும் வகையில் ஆளுநர் செயல்படுவதாவும் திமுக கடுமையாக விமர்சித்துள்ளது.

தொடர்ந்து தமிழகத்தில் சேலம், காஞ்சிபுரம், திருப்பூர், திருவண்ணாமலை, கோவை, ஈரோடு, திருச்சி உள்ளிட்ட மாவட்ட தலைநகரங்களில் அந்தந்த திமுக மாவட்ட செயலாளர்கள் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஆளுநருரோடு, எடப்பாடியையும் கண்டித்த திமுக:
தமிழகம் முழுவதும் திமுக நடத்தி வரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மட்டுமின்றி எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமியையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக பாஜக - அதிமுக இடையே கள்ள உறவு இருப்பதாக கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகிறது.

“சட்டமன்ற மரபுகளை அவமதித்த ஆளுநரை கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம்”, “பாஜக - அதிமுக கள்ள உறவு கூட்டணியை காப்பாற்றாதே, காப்பாற்றாதே” “எட்டப்பன் எடப்பாடியே தமிழகத்தை காட்டிக்கொடுக்கும் வேலையை செய்யாதே”, “தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கும் ஆளுநரே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு” “தமிழக ஆளுநரே ஓடிப்போ” போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: போராட்டத்தில் கோல்மால்... திமுகவை ஜெயிக்க வைத்தவரை பிதுக்கிய நீதிமன்றம்... ஜெயிலுக்குப்போகும் பி.கே..!