கடலூரில் தொழிற்சாலைக்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதைக் கண்டித்து முந்திரிச் செடிகளை நடும் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அருகே வெள்ளக்கரை ஊராட்சிக்குட்பட்ட மலையடிகுப்பம், பெத்தான்குப்பம், கொடுக்கன்பாளையம் உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளது. 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது.

இந்த பகுதியில் தொழிற்சாலை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது. 167 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்ரமித்ததாக கூறி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19-ந் தேதி அங்குள்ள குடும்பத்தினர் 15 நாட்களுக்குள் காலி செய்யும்படி வருவாய்த்துறை சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அப்போது முதல் விவசாயிகள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். சாலைகளில் சமையல் செய்து போராட்டம், வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம் என்று கடந்த 3 மாதமாக விதவிதமான முறைகளில் அவர்கள் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்து வந்தனர்.
இதையும் படிங்க: விவசாயி என்ற முறையில் சொல்கிறேன், வேளாண் பட்ஜெட் பாராட்டத்தக்க ஒன்று - வேல்முருகன்..!

100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் வசித்து வரும் எங்களை திடீரென காலி செய்யசொல்வது எப்படி என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். பட்டாகோரி தாங்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்து வந்தனர். நிலம் கையகப்படுத்தும் முடிவைக் கைவிட்டு இலவச பட்டா அளிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருந்து வந்தது.
இந்நிலையில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், நிலம் எங்கள் உரிமை என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தலைமையில் இன்று அங்கு போராட்டம் நடைபெற்றது. அதாவது வெட்டப்பட்ட முந்திரி மரங்கள் இருந்த இடத்தில் முந்திரிச் செடிகளை நடும் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட வந்தனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் விவசாய சங்கத்தினர் மற்றும் கிராமமக்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறைக்கு எதிராகவும், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் கோஷங்களை எழுப்பி திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் உள்ளிட்ட 250- க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது பேசிய மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், 150 ஆண்டுகளுக்கும் மேலாக நிலத்தை பராமரித்து வந்த நில உரிமையாளர்களுக்கு பட்டா வழங்குவதே நிரந்தர தீர்வு என குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல்..! புதிய திட்டங்களை எதிர்நோக்கி காத்திருக்கும் விவசாயிகள்..!