அண்ணா பல்கலைக்கழக மாணவி கடந்த டிசம்பர் மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுதொடர்பாக பெண்ணின் பெற்றோர் கோட்டூர்புரம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் அதேபகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவனை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தை தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த சென்னை உயர்நீதிமன்றம், மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகளைக் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்து விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டது. கோட்டூர்புரம் போலீசார் வசம் இருந்த கோப்புகள், ஆவணங்களை பெற்ற சிறப்புக் குழுவினர் விசாரணையை துரிதப்படுத்தினர்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை.மாணவி வழக்கில் கைதான ஞானசேகரன் மருத்துவமனையில் அனுமதி..

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசேகரனை காவலில் எடுத்து விசாரித்தால் தான் முழுமையான உண்மைகள் வெளிவரும் என்று காவலில் எடுப்பதற்காக சைதாப்பேட்டை 9-வது நீதிமன்றத்தில் சிறப்புக் குழுவினர் மனுதாக்கல் செய்தனர். 9 நாட்கள் கோரிய நிலையில் 7 நாட்கள் விசாரிக்க நீதிமன்றம் அனுமத வழங்கியது.
முதல்நாள் எழும்பூர் காவல்நிலையத்தில் வைத்து விடிய, விடிய ஞானசேகரனிடம் விசாரணை நடைபெற்றது. மறுநாள் அண்ணாநகர் காவல்நிலையம் கொண்டு செல்லப்பட்ட ஞானசேகரன், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இந்நிலையில் நேற்று அதிகாலை ஞானசேகரனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. முதலில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு ஞானசேகரன் மாற்றப்பட்டு முழுமையான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக ஞானசேகரனின் தலை ஸ்கேன் செய்யப்பட்டு பார்த்தது. பொதுவாக வலிப்பு நோய் உள்ளவர்கள் அல்லது திடீரென வலிப்பு நோய் வருபவர்களுக்கு மூளையில் அதற்குண்டான ரசாயன மாற்றங்கள் ஏற்படும். இதனை மருத்துவ சோதனை தெரிவித்து விடும். ஆனால் அதுபோன்று எந்தவொரு மாற்றங்களும் ஞானசேகரனுக்கு ஏற்படவில்லை என்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது.
அதாவது வலிப்பு நோய் வந்தது போல் ஞானசேகரன் நாடகமாடியது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு எழும்பூர் காவல்நிலையம் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் ஞானசேகரனிடம் தொடர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆளுநர் போறது வாக்கிங்னா..உதயநிதி போறது ரன்னிங்கா.. ? தமிழிசை விளாசல் ..!