ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜாக்டோ ஜியோ சாலை மறியல் போராட்டத்திற்கு தடை விதிக்க உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அரசு ஊழியர்கள் ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கை குறித்து பரிசீலனை செய்ய நான்கு அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜியோ ஜாக்டோ திருச்சியில் 04.02.2025 அன்று நடைபெற்ற தங்களது மாநில அளவிலான கூட்டத்தில் அனைத்து தாலூகா தலைநகரங்களிலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ட்ரைக் மற்றும் சாலை மறியல் போராட்டம் 25.02.2025 அன்று நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: திருப்பரங்குன்றத்தில் பேரணி, ஆர்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு.. உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு..!
ஏற்கனவே உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் அரசு ஊழியர்கள் இவ்வாறு ஸ்டிரைக் நடத்துவது சட்ட விரோதம் என்று தடை செய்து உள்ள நிலையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ள ஸ்டிரைக் மற்றும் சாலை மறியல் சட்ட விரோதமானது.
இவர்களின் கோரிக்கைகள் நியாயமாக இருந்தாலும் அது அவர்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான பிரச்சனை. சாலை மறியல் நடைபெற்றால் பொது மக்கள், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ மாணவியர், மருத்து தேவைகளுக்காக செல்பவர்கள், தினசரி கூலி வேலைக்கு செல்பவர்கள், தனியார் துறையில் பணிபுரிபவர்கள், ஸ்டிரைக் ல் பங்கு பெறாத ஊழியர்கள் பாதிப்பு அடைவார்கள்.

மேலும் சாலை மறியலில் ஈடுபடுபவர்களை காவல்துறையினர் திருமண மண்டபங்களில் தங்க வைத்து அவர்களுக்கு உணவு குடிநீர் போன்ற வசதிகள் அளிக்க வேண்டும். இதனால் அரசுக்கு தேவையற்ற செலவு ஏற்படுகிறது.
எனவே பொது மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஜாக்டோ ஜியோ நடத்த உள்ள ஸ்டிரைக் மற்றும் சாலை மறியல் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்.
ஸ்டிரைக் மற்றும் சாலை மறியலில் ஈடுபடும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் மீது கிரிமினல் சட்டங்கள் கீழ் வழக்கு பதிவு செய்யவும், அவர்களை தற்காலிக பணி நீக்கம் செய்யவும், உரிய விசாரணை நடத்தி நிரந்தர பணி நீக்கம் செய்யவும் உத்தரவிட வேண்டும் என வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் நிஷா பானு மற்றும் நீதிபதி ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அரசு ஊழியர்கள் கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்த நான்கு அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்த நீதிபதிகள் பேச்சுவார்த்தை முடியும் வரை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் எவ்வித போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என உத்தரவிட்டு இந்த வழக்கில் அரசு தலைப்பில் என்ன பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்பது குறித்து பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: முதன்மை மாவட்ட கல்வி அதிகாரியை கைது செய்ய உத்தரவு - காரணம் என்ன?