நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ந் தேதி தொடங்கியது. கூட்டுக்குழுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். தொடர்ந்து கடந்த ஒன்றாம் தேதி 2025-26ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூட்டம் நடைபெற்றது. அப்போது எதிர்கட்சிகள் உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்-ஜில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் நிகழ்ந்த நெரிசலில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறித்து விவாதிக்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பின. அதுபற்றி நேரமில்லா நேரத்தில் விவாதிக்கலாம் என மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கூறியபோதும் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

ஆனாலும் சபாநாயகரின் விளக்கத்தை ஏற்க மறுத்த எதிர்கட்சி எம்.பி.க்கள் அவரது இருக்கையை முற்றுகையிட்டு கூச்சல் போட்டனர். அவர்களை அமைதியாக இருக்க சபாநாயகர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. இதன்பின்னர் எதிர்கட்சிகள் மக்களவையை விட்டு வெளிநடப்பு செய்தன.
இதையும் படிங்க: பெயர்தான் 100 நாட்கள் வேலை! 44 நாட்கள்தான் வேலையாம்! நிதி ஒதுக்கீடும் அதிகரிக்கவில்லை
இதேபோன்று மாநிலங்களவையிலும் கும்பமேளா விவகாரம் எதிரொலித்தது. இத்தனைக்கோடி மக்கள் கூடுவார்கள் என தெரிந்தும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏன் செய்யவில்லை எனக்கூறி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பின. அமைதி காக்குமாறு மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தங்கர் கேட்டுக் கொண்டார். அங்கும் கூச்சல், குழப்பம் நிலவியதைத் தொடர்ந்து எதிர்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
எதிர்கட்சிகளின் இந்த செயலுக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு கண்டனம் தெரிவித்துள்ளார். அமைதியாக இருக்கும்படி இருஅவைகளின் தலைவர்கள் கேட்டுக் கொண்ட பிறகும் எதிர்கட்சிகள் இவ்வாறு கூச்சல் போடுவது சரியல்ல என்று அவர் கூறியுள்ளார். மக்கள் பிரச்னைகளை பற்றி விவாதிக்காமல் இவ்வாறு இடையூறு செய்வதற்கு தான் நாட்டு மக்கள் உங்களை தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளனரா? என்றும் அவர் காட்டமாக கேட்டுள்ளார். இதன்பின்னர் அவை நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: விஜய் ரூட்டைப் பிடித்து... இளைஞர்கள் ஹார்ட்டை பிடிக்கும் மு.க.ஸ்டாலின்... முதல்வரின் தரமான சம்பவம்!