சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளுக்கும் அதிகமாக வீழ்த்தி அசாதாரண சாதனையை படைத்தவர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் போது தனது சர்வதேச கிரிக்கெட் போட்டி ஓய்வை அறிவித்திருந்தார். தற்போது அவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி அசத்த உள்ளார். 38 வயதான அஸ்வின் 106 டெஸ்ட் போட்டிகளில் இதுவரை விளையாடியுள்ளார், மேலும் 537 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

அவர், 8 முறை ஒரே போட்டியில் 10 விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்தவர். பௌலிங் மட்டும் இல்லாது பேட்டிங்கிலும் சிறந்து விளங்கும் அஸ்வின் இந்தியாவின் பிரதிநிதித்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: பாஜக -அதிமுக கூட்டணி..? எடப்பாடியாரை மிரட்டினாரா ஜெயகுமார்..? திமுகவின் சித்துவேலை..!

இந்த நிலையில், கேரம் பால் ஈவண்ட் அண்ட் மார்க்கெட்டிங் கம்பெனி பிரைவேட் லிமிடெட் சென்னை மாநகராட்சிக்கு கோரிக்கை ஒன்றை வைத்து இருந்தது. ஆரிய கவுடா சாலை அல்லது அஸ்வினின் சொந்த வீடு இருக்கும் சாலைக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் சாலை என பெயரிட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பான மனதை சென்னை மாமன்ற கூட்டத்தில் கொடுத்திருந்தனர்.

இந்த நிலையில் உலகின் சிறந்த ஆல் ரவுண்டரில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்ட அஸ்வினின் பெயரை ஆரிய கவுடா சாலை அல்லது ராமகிருஷ்ணாபுரம் ஒன்றாவது தெருவிற்கு ரவிச்சந்திரன் அஸ்வின் சாலை என பெயர் சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அதில், கிரிக்கெட் வீரர் அஸ்வின் தமிழகத்திற்கும், இந்திய நாட்டிற்கும் பெருமைகளை சேர்த்துள்ளார் என்றும் அவரது சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக ரவிச்சந்திரன் அஸ்வின் சாலை என்று பெயர் சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

அந்த கோரிக்கை குறித்த ஆய்வுக்குப் பிறகு சென்னை மாநகராட்சி மாமன்றம் ராமகிருஷ்ணாபுரம் முதல் தெருவுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் சாலை என பெயரிட முடிவு செய்து இருக்கிறது. இந்த சாலை சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து பலரும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். விரைவில் அந்த சாலைக்கு அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் செய்து அறிவிக்கப்படும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: மாணவர்களுக்கு இலவச லேப்டாப்... அமைச்சர் தங்கம் தென்னரசு அதிரடி அறிவிப்பு...!