தன்னிடம் தவறாக நடந்ததாக பெண் காவலர் அளித்த புகாரின் பேரில் போக்குவரத்து இணை கமிஷனர் மகேஷ்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார், அவரது சஸ்பெண்ட் நியாயமற்ற ஒன்று என அவரது மனைவி அனுராதா, செய்தியாளர்களிடம் தெரிவித்தார், அவர் கூறியதாவது...
”நான் மகேஷ்குமார் ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி. எனக்கு நேற்று மறக்க முடியாத நாள். என்னுடைய திருமணம் நாள் அதுவுமாக எனக்கு இப்படி இடி விழுந்த மாதிரி சஸ்பெண்ட் தகவல் வந்தது. என் கணவருடன் தொடர்பிலிருந்த பழிவாங்கும் செயலாக அந்தப் பெண் செய்தது பெரிய அதிர்ச்சி. நள்ளிரவு 12 மணிக்கு எங்கள் வீட்டிற்கு வந்து என் கணவருக்கு சஸ்பென்ஷன் ஆர்டர் கொடுத்ததை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நேர்மையான உழைப்புக்கு கிடைத்த பெரிய அவமானமாக இதை கருதுகிறேன். ஏனெனில், எங்கு வேலை செய்தாலும் என் கணவர் எல்லோருக்கும் நல்லதைத்தான் செய்து இருக்கிறார்.

அந்த பெண் காவலர் பழிவாங்கும் செயலாக இதை செய்ததால் எனது குடும்பம் சிதைந்து இருக்கிறது. இந்த நிலைமை மற்றவர்களுக்கு வரக்கூடாது என்பதற்காக நான் பேட்டி கொடுக்கிறேன். என் கணவர் மீது அந்த பெண் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக என் கணவர் மீது சொல்கிறார்கள். ஆனால் அப்படி எதுவும் இல்லை. அவர்கள் இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருந்தது எனக்கு தெரியும். இதுகுறித்து நான் பல முறை இருவரையும் கண்டித்திருக்கிறேன். போனில் அந்த பெண்ணிடம் கெஞ்சியும் இருக்கேன். நானும் காவல்துறையில் பணியாற்றியதால் எனக்கும் தெரியும். எங்கள் குடும்பமே காவல்துறையில்தான் இருந்தது. தவறு நடந்தால் அதை ஆதரிக்க மாட்டேன். கண்டிப்பாக கண்டிப்பேன்.
இதையும் படிங்க: விஜய்யை பாஜக வளைத்தால்... விஜய்யை மறைமுகமாக எச்சரிக்கும் கே.பி. முனுசாமி..!
ஆனால் இப்படி பழிவாங்கும் வகையில் எனது திருமண நாள் அன்று அந்த பெண் இப்படி செய்திருக்காங்க. இது தாங்க முடியாத வேதனையாக இருக்கு. அவங்க அடிக்கடி பணம் கேட்பாங்க. அதற்கு அவரும் கொடுத்து வந்தார். இப்ப அந்த பெண், மறைமலைநகரில் வீடு ஒன்று கட்டி வருகிறார். அதற்காக ஒரு பெரிய தொகையை கேட்டு தற்போது மிரட்டி வருகிறார். அதனால்தான் இந்த பிரச்சனையே வந்துள்ளது. அவங்க வீடு கட்டுவதற்கு என் கணவர் தனது நண்பர் மூலம் உதவி செய்துள்ளார். எங்களிடம் ரூ.25 லட்சம் எல்லாம் கேட்டால் நாங்கள் என்ன செய்வது?.
இருவருக்கும் தெரிந்தேதான் ரிலேஷன்ஷிப்பில் இருந்தாங்க. அது எப்படி பாலியல் பலாத்காரம், பாலியல் துன்புறுத்தல் என்றெல்லாம் சொல்ல முடியும். கடந்த ஓராண்டாக இருவரும் தொடர்பில் இருந்தாங்க. எனது குடும்பம், கவுரவம் இதையெல்லாம் பார்த்து எல்லாம் சரியாகி விடும் என்று நினைத்தேன். ஆனால் இப்படி நடந்து விட்டது. இந்த பெண் செய்தது தவறான முன்னுதாரணம். செய்த தவறை மறைத்துவிட்டு, வேலை செய்த இடத்தில் அவங்க..கையை பிடித்து இழுத்த மாதிரியும், காலைப் பிடித்து இழுத்தமாதிரியும், அவங்களை துரத்தி துரத்தி..தொல்லை கொடுத்த மாதிரியும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அப்படி எதுவுமே இல்லை. அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. மனச்சாட்சி என்பது எல்லாருக்கும் வேண்டும்.

காவல்துறையில் 25 ஆண்டுகள் ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்த பெயரை ஒரே நாளில் எல்லோர் முன்னாடியும் போட்டு சிதைத்துவிட்டு போகிறது என்பது ரொம்ப சுலபம். ஆனால் அந்த பெயரை வளர்த்து எடுப்பது மிகவும் கஷ்டம். காக்கிச்சட்டை என்பது முக்கியம். அதை ஆசை ஆசையாக போட்டது, ‘அந்த சட்டையை உருவி எடுக்கனும் நினைத்து செய்தால், அதை ஏற்றுக் கொள்ள முடியாது’. அது எங்கள் உயிரை பிரித்து எடுப்பது மாதிரி இருக்கு. ‘எங்களுக்கு காக்கி சட்டையால்தான் காதல் வந்தது’. அப்படி இருக்கும்போது, இப்படி ஒரு புகார் கொடுத்தது எங்களுக்கு மிகப்பெரும் மன உளைச்சலை கொடுத்துள்ளது.
இந்த புகாரை சரியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவசரப்பட்டு நடவடிக்கை எடுத்து, என் கணவரின் பெயரை கெடுக்க கூடாது என்பதுதான் என்னுடைய தாழ்மையான வேண்டுதல். அவங்க உயர் அதிகாரிகளுடன் எதற்கு பழகுகிறார்கள்?. ஆதாயம் இருக்கிறது என்பதற்காக தான் பழகுகிறார்கள். அப்படி பணம், எதுவோ கிடைக்கிறது. கேட்ட இடத்திற்கு பணிமாறுதல் கிடைக்கிறது என்பதால்தானே அவங்க பழகுவது.
மறைமலைநகரில் அந்த பெண் புதிதாக வீடு கட்டி கொண்டு இருக்கிறார். அதற்கு ரூ.25 லட்சம் பணத்தை கேட்டு இருக்காங்க. அதற்கு அவர் இவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார். கிழக்கு தாம்பரத்தில் எனக்கு தெரிந்து ஒருவர் உள்ளார். அவர் மூலம் வீட்டிற்கு தேவையான பொருட்களை குறைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்குகிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் அந்த பெண் ரூ.25 லட்சம் பணம் கேட்டு கடந்த 7ம் தேதி பிரச்னை செய்தார். அதன் பிறகு தான் எல்லாம் நடக்கிறது.

எனக்கு நீங்க பணம் கொடுத்துதான் ஆகவேண்டும் என்று அந்த பெண் கூறினார். எனக்கு முதலில் சந்தேகம் வந்தது. எனது கணவர் ரொம்ப நேரமாக போன் பேசிகிட்டு இருந்தார். அப்படி யாருக்கிட்ட இப்படி ரொம்ப நேரமாக பேசுகிறார் என்று, அவரது போனை எடுத்து அந்த எண்ணுக்கு போன் செய்தபோது எனக்கு இந்த விவரம் தெரியவந்தது. இதை உடனே நான் கண்டித்தேன். உங்களுக்கும் குடும்பம் இருக்கிறது என்று கூறினேன். ரொம்ப நேரம் கெஞ்சியும் கேட்டு இருக்கேன். அவங்க ஒரு பெண் என்பதால் நான் மிரட்டும் வகையில் பேசவில்லை. வீடு கட்டுவதற்கு எங்களிடம் பணம் கேட்டு மிரட்டுவது எப்படி சரியாகும்.

பாலியல் துன்புறுத்தல் என்றால், அந்த பெண்ணுக்கு அச்சுறுத்தல் கொடுத்து இருந்தால்தான் வரும். அவர்கள் இருவரும் ஒன்றாக இருந்த பிறகு இப்போது பாலியல் துன்புறுத்தல் என்று புகார் கொடுத்தால் எப்படி என்றுதான், புரியல. இருவரும் ஒப்புக்கொண்டுதான் ஒரு இடத்திற்கு போகிறார்கள், வருகிறார்கள். கடந்த 7ம் தேதி ரூமில் இருந்து வெளியே வருகிறார்கள். அதற்கான சிசிடிவி பதிவு இது. எனவே ஒரு சார்பாக இல்லாமல் இருதரப்பிலும் என்ன நடந்தது என்று தெரிந்து கொண்டு பேசினால் நன்றாக இருக்கும். அதற்காகத்தான் இந்த செய்தியாளர் சந்திப்பு நடக்கிறது”. இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: காவல் நிலையம் முன்பே காதலர்களை விரட்டியடித்த இந்து முன்னணியினர்; வைகை அணை பூங்காவில் அத்துமீறல்...!