திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள திம்மாம்பேட்டை சுற்று வட்டார பகுதிகளில் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் பிரபு, சமூக ஆர்வலர்கள் ராதாகிருஷ்ணன், முத்தமிழ்வேந்தன் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அலசந்தாபுரத்தில் சந்திரசேகரன் என்பவர் நிலத்தில் உள்ள தென்னந்தோப்பில் விசித்திரமான ஒரு நடுகல் இருப்பதாக தகவல் கிடைத்தது. அந்த குழுவினர் அப்பகுதியில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த நடுகல் 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட 14-ம் நூற்றாண்டை சேர்ந்த விஜயநகர மன்னர்கள் ஆட்சிக்காலத்தை சேர்ந்த நடுகல் என்பதும் தெரியவந்தது.

அந்த நடுகல் 7 அடி உயரமும், 6 அடி அகலமும் கொண்டதாக அமைந்து உள்ளது. மையப்பகுதியில் வீரனின் உருவமும், அவனோடு போரிட்ட எதிரியின் உருவமும் செதுக்கப்பட்டு உள்ளது. வீரன் தனது வலது கையில் கொடுவாளும், இடது கையில் ஈட்டியும் வைத்துக் கொண்டு எதிரியை தாக்கியவாறு அமைந்து உள்ளது. வீரனின் இடையில் உடைவாளும் கழுத்தில் ஆபரணங்களும் காணப்படுகின்றன. எதிராளியின் கையில் வில்லும், அம்பும் காணப்படுகின்றது. எனவே போர்க்களத்தில் வீரமரணம் அடைந்த வீரனுக்கு எடுக்கப்பட்ட நடுகல் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: டென்ஷன்.. டென்ஷன்.. ஆத்திரத்தில் மனைவியை கத்தியால் குத்தி விட்டு தப்பியோடிய கணவர் கைது..!

நடுகல்லில் மொத்தமாக 11 மனித உருவங்களும், ஒரு குதிரை, 2 சிவலிங்கங் செதுக்கப்பட்டு உள்ளது நடுகல்லின் இடதுபுறம் ஒரு பெண் இசைக்கருவியினை சுமந்த நிலையிலும், அதற்கு மேல் ஒரு பெண் கள குடுவையினை ஏந்திய நிலையிலும், அதற்கு மேல் ஒரு பெண் வீரனுக்குச் சாமரம் வீசிய நிலையிலும், அதற்கு மேல் வீரனின் குதிரையும் காணப்படுகின்றன. நடுகல்லின் மேல்புறம் இறந்த வீரனை நான்கு பெண்கள் தேவலோகம் அழைத்துச் செல்லும் காட்சியும். அதற்கு அருகே ஒரு பெண் சிவலிங்கத்திற்கு நீராட்டும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.

சிவலிங்கம் ஒன்றில் ஒருவர் தன் இடதுகாலை வைத்த நிலையில் காணப்படுகிறார். அவரது வலது கையில் வில் உள்ளது. அவர் தன் இடதுகையினால் தமது கண்ணைக் குத்தியவாறு சித்தரிக்கப்பட்டுள்ளார். இந்த நடுக்கல்லில் திண்ணப்பர் என்ற கண்ணப்ப நாயனார் குறித்த செய்தி இடம்பெற்றுள்ளது. தமிழக அளவில் இதுவரை எண்ணற்ற நடுகற்கள் தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகிறது. ஆனால் கண்ணப்பநாயனார் குறித்த செய்தியோடு வடிக்கப்பட்ட நடுகல் தமிழகத்தில் இது மட்டுமேயாகும்.என்று கூறினார். இந்த விசித்திர நடு கல்லை அப்பகுதி மக்கள் வெகுவாக கண்டு ரசித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சீமான் பாதுகாவலர் ஜாமீன் கோரிய விவகாரம்.. காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..!