தமிழ்நாட்டில் மது வணிகத்துக்கு பொறுப்பு வகிக்கும் டாஸ்மாக நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் பல்வேறு மது ஆலைகளில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனைகளில் குறைந்தது ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடத்தப்பட்டிருப்பது தெரிய வந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சி அளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்..
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள 5 தனியார் மது ஆலைகளில் கடந்த 7-ஆம் தேதி தொடங்கி 3 நாள்களுக்கு அமலாக்கத்துறை சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் அவற்றின் விவரங்கள் குறித்த செய்திகள் வெளியாகி வருகின்றன.
அவற்றில் குறைந்தது ரூ.1000 கோடிக்கு ஊழல் நடந்திருப்பது தெரிய வந்துள்ளதாகவும், இது டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற ஊழல் பெருங்கடலின் ஒரு துளி தான் என்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியதாக தி ஃபெடரல் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: மாநகரப் பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லையா?.. அன்புமணி கண்டனம்

இது தவிர தமிழகத்தின் மது விற்பனையில் 40% கணக்கில் காட்டப்படாமல் விற்பனை செய்யப்படுவதற்கான ஆவணங்களும் கிடைத்திருப்பதாகவும் அது கூறியுள்ளது. ஊழல் பணம் ரூ.1000 கோடியில் சிறு பகுதி மட்டும் தான் டாஸ்மாக் அதிகாரிகளுக்கு சென்றிருப்பதாகவும், மீதமுள்ள பணம் யாருக்கு சென்றது என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படும் மது வகைகளில் 50 விழுக்காட்டுக்கு கலால் வரியும், விற்பனை வரியும் செலுத்தப்படுவதில்லை என்பது தான். வரி செலுத்தப்படாமல் மது வணிகம் செய்யப்படுவதை தடுப்பதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்படியானால், இன்று வரை கலால் வரி, மதிப்புக் கூட்டு வரி ஏய்ப்பு தொடர்வதாகத் தான் பொருள். இந்த வகையில் மட்டும் ஆண்டுக்கு சுமார் ரூ.50,000 கோடி வீதம் 4 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

டாஸ்மாக் வணிகத்தால் அரசுக்கு கிடைக்கும் லாபத்தை விட, டாஸ்மாக் முறைகேடுகளால் ஆட்சியாளர்களுக்கு கிடைக்கும் லாபம் அதிகம் என்று கூறப்படுகிறது. அதனால் தான் டாஸ்மாக் ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க தமிழக அரசு மறுக்கிறது.
அமலாக்கத்துறை சோதனையில் தெரியவந்துள்ள ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழலால் பயனடைந்தவர்கள் யார், யார்? என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டியதும், அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டியதும் அவசியம் ஆகும். தமிழகக் காவல்துறை அதை செய்யும் என்ற நம்பிக்கை தமிழ்நாட்டு மக்களுக்கு இல்லை. எனவே, டாஸ்மாக் ஊழல்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும்.இவ்வாறு அந்த செய்தியில் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்..
இதையும் படிங்க: அறிவு நகரை.. சேலம், கோவை, மதுரைக்கு மாத்துங்க..! பாமக அன்புமணி அட்வைஸ்